2023 ஆம் ஆண்டிற்கான கர்நாடக மாநில இடைக்கால பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக பார்க்கபடுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். தென்னிந்தியாவில் கர்நாடகாவில் மட்டும் தான் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை அமைக்க போராடி வரும் நிலையில், கர்நாடகாவில் மீண்டும் தங்கள் ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால், பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பட்ஜெட்டை பாஜக தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், கர்நாடகா ராமநகரம் மாவட்டத்தில், அயோத்தியை போல மிக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டபடும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் உரையில் தெரிவித்தார். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கர்நாடகாவில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களை புனரமைக்கும் பணியை கர்நாடக அரசு செய்யும் எனவும் உறுதி அளித்துள்ளார். இதற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் அறிவித்தார்.
ராய்ச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனவும், இந்த பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கான முன்னோட்டமாக இருக்கும் எனவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார். அதோடு, மாநிலத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 11236 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.
விவசாயத்திற்கான இலவச கடன் 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனவும் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். பெங்களுருவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களுக்காக கூடுதல் கழிப்பிடங்கள் கட்டப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் டின் பேக்டரி முதல் மேட ஹள்ளி வரை, யஷ்வந்த்பூர் முதல் மதிகெரா மற்றும் பெல் ரோடு வரையில் 350 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படவுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் ”மக்கால பஸ்” என்ற பெயரில் புதிய பேருந்து திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் சேர எஸ்.சி, எஸ்.டி மற்றும் சிறுபான்மை சமூக இளைஞர்கள் 10 ஆயிரம் பேருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெங்களூருவில் பருவநிலை மாறுபாடு மற்றும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் உலக வங்கியின் உதவியுடன் 3,000 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெங்களூருவில் அதிக நெரிசல் நிறைந்த மார்க்கெட்கள், மெகா கமர்சியல் காம்பிளக்ஸ்களில் பெண்களுக்கு 250 கழிவறைகள் கட்டி தரப்படும்.
கீழ் நடுத்தர வகுப்பை சேர்ந்த மக்களின் வசதிக்காக தொழில் வரி 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
நடப்பாண்டு 30 லட்சம் விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
சி.எம் வித்யா சக்தி திட்டத்தின் கீழ் அரசு ப்ரீ யூனிவர்சிட்டி மற்றும் டிகிரி கல்லூரிகளில் இலவச கல்வி அளிக்கப்படும்.
கிராமப்புற கன்னட பள்ளிகளில் படித்து அரசு ஒதுக்கீட்டின் கீழ் தொழில் படிப்புகளில் சேரும் 500 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
100 அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர் சி.என்.ஆர் அறிவியல் திட்டம் தொடங்கப்படும். இதன்மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.
110 கிராமங்களில் சாலைகளை சீரமைக்க 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூருவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
அமைப்புசார் பிரிவில் பணியாற்றி வரும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் வகையில் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
கல்வி ரீதியாக பின் தங்கிய தாலுக்காக்களில் உள்ள 24,347 பள்ளிகளில் நூலகங்கள், படிப்பகங்கள் கொண்டு வர 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.