கர்நாடக வனத்துறையினரால் தமிழக மீனவர் சுட்டு கொல்லப்பட்டதற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் மீனவர் கொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பாலாற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்புத்தம்பி ராஜா கொல்லப்பட்டிருப்பது பேரதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள தமிழக – கர்நாடக வனப்பகுதியில் காவிரியும் பாலாறும் இணையும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசல்களில் காலங்காலமாகப் பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாலாற்றில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் பரிசல்கள் மீது அத்துமீறி கர்நாடக வனத்துறையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி ராஜா கொல்லப்பட்டிருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டு எல்லைக்குள் தமிழர்களுக்குச் சொந்தமான பாலாற்றில் மீன்பிடிக்க தமிழ் மீனவர்களுக்கு உரிமை இல்லையா? அப்படியே கர்நாடக எல்லைக்குள் ஒருவேளை தவறுதலாக நுழைந்திருந்தாலும் அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கலாமே? கொல்லப்படும் அளவிற்கு அவர்கள் செய்த கொடிய குற்றம்தான் என்ன? இந்திய ஒருமைப்பாடு, திராவிட ஒற்றுமை என்றெல்லாம் பேசுபவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இந்தியம், திராவிடம் இவற்றில் ஏதாவது ஒரு உணர்வு இருந்திருந்தாலே என் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்களே? அப்பாடியென்றால் அவையெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெறும் வாய் வார்த்தைகள் மட்டும்தானா?
ஒரே நாடு – ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே குடும்ப அட்டை என்றெல்லாம் ஒருமைப்பாடு பேசும் ஒரே நாட்டிற்குள் மீன் பிடிக்க மட்டும் உரிமை இல்லையா? தமிழ்நாட்டிற்குள் இந்திக்காரரர்களின் பெருமளவு வருகை குறித்து கேள்வி எழுப்பியபோதெல்லாம், சனநாயகம் பேசியவர்கள் இப்பொது வாய் திறப்பார்களா? தமிழ்நாட்டு மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனவர் மீது கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? குஜராத் மீனவர் சுட்டு கொல்லப்பட்டபோது கொதித்தெழுந்து, பாகிஸ்தான் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த மோடி அரசு கர்நாடக வனத்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
ஆந்திரக் காடுகளில் அம்மாநில அரசால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது அமைதி காத்த அதிமுக அரசினைப்போல, இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்த இந்திய ஒன்றிய அரசினைப்போல அல்லாது திமுக அரசாவது கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது கேரள அரசின் எல்லை அபகரிப்பை வேடிக்கை பார்த்ததுபோல் இக்கொடிய நிகழ்வையும் வழக்கம் போலக் கண்டும் காணாமல் கடந்து போகுமா திமுக அரசு? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் எழுந்துள்ளது. இதற்கு முன்பே இருமுறை கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிந்துள்ளதாக அங்கு வாழும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது தம்பி ராஜாவின் உடலிலும் துப்பாக்கியால் சுட்ட’ தடயங்கள் உள்ள நிலையில் இனியும் தமிழ்நாடு அரசு அமைதி காப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழக மீனவர் அன்புத்தம்பி ராஜாவை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்து அவர்களை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ. 50 லட்சம் துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் துப்பாக்கி சூடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரி பாலாறு எல்லைப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதனை அடுத்து தமிழக காவல்துறையினரும் கர்நாடகா காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர் இதனால் கர்நாடகா தமிழ்நாடு இடையே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது
இந்த நிலையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்ததோடு பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததோடு இது குறித்து கர்நாடகா வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக கர்நாடக எல்லை பகுதிகளில் தொடரும் இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கர்நாடகா வனத்துறையினரும் தமிழக வனத்துறையினரும் ஒரு சுமுகமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் அந்த பாகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் வனத்துறையினால் சுட்டுக் கொல்லப்பட்ட ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. உறவினர்களின் ஒப்புதலை பெற்று பிரேதச பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.