பிரபாகரன் உயிருடன் இருக்கும் படங்கள், அறிக்கைகள் விரைவில் வெளியாகும்: காசி ஆனந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமுடன் இருக்கிறார்; அவரது போட்டோக்கள், அறிக்கைகள் விரைவில் வரும் என்று பிரபாகரனுக்கு நெருக்கமானவராக இருந்த காசி ஆனந்தன் அறிவித்துள்ளார்.

2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பிரபாகரன் கொல்லப்படவில்லை என கூறி வந்தனர். இலங்கை ராணுவம் இதனை மறுத்தது. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் திடீரென தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்ற தகவலை அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் உலகத் தமிழருக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். இந்த சந்திப்பின் போது கவிஞர் காசி ஆனந்தனும் உடனிருந்தார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்பட்ட போது பிரஸ் மீட்டில் பங்கேற்ற தலைவர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

நெடுமாறனின் இந்த அறிவிப்பு தொடர்பாகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகி இருக்கின்றன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், தமிழீழத் தேசியத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்று அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கு வந்த தகவலை உலகத் தமிழர்களுக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்திலிருந்து அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். தமிழீழத் தாயகத்தை மீட்பதற்கு ஈழ விடுதலைப் போர்க்களத்தில் தலைவர் பிரபாகரனோடு களத்தில் நின்றப் போராளிகள் சிலர் இன்னமும் உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அத்தகைய போராளிகள் அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருந்தால் அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு ஒன்றும் இருக்க முடியாது என கூறியிருந்தார்.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பிரபாகரன் உயிரோடு இருக்க சாத்தியமில்லை என்கிற தொனியில் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இலங்கையில் ஒட்டுமொத்தமாக சிங்கள அரசியல் தலைவர்கள், இலங்கை முன்னாள் ராணுவ அதிகாரிகள் பிரபாகரன் உயிரோடு இல்லவே இல்லை என்கின்றனர். ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும் முரண்பாடான தகவல்களைத் தெரிவிக்கின்றனர். மேலும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளும் குழப்பமான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் அறிவித்த பிரஸ் மீட் மூலம், பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர்; மகன்கள் பாலச்சந்திரன், சார்லஸ் மரணம் அடைந்துவிட்டனர் என்பது உறுதியாகி இருக்கிறது. பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் தமிழீழ விடுதலைக்கான ஒரு அரசியல் இயக்கம் தொடங்கப்படலாம்; அதற்கு சர்வதேச சமூகம் அங்கீகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தந்தை பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், துவாரகாவின் இருப்பு தொடர்பாக கூறியிருந்தார்.

இந்நிலையில் கவிஞர் காசி ஆனந்தன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறியது முதல் கட்ட தகவல் மட்டும்தான். பிரபாகரன் உயிருடன் இருக்கும் படங்கள், அவரது குடும்பத்தினர் படங்கள், பிரபாகரனின் அறிக்கை எல்லாம் இனி வெளியாக இருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 30 குழுக்களாக இயங்குகின்றனர். இவர்களை ஒருங்கிணைந்து பிரம்மாண்டமான அரசியல் இயக்கத்தை பிரபாகரன் இனி வழிநடத்துவார் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.