கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் மாயம்: பொன் மாணிக்கவேல்

கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் மாயமாகி உள்ளதாக முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேற்று சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு வந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சோழர் காலத்தில் கட்டப்பட்ட 6 கோவில்களை ஆய்வு மேற்கொண்டோம். உலக சிவனடியார் கூட்டமைப்பு உதவியுடன் கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது. கன்னியாகுமரியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த புவன நந்தீஸ்வரர் கோவிலை காணவில்லை. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சோமஸ் கந்தர் சிலையையும் காணவில்லை. ஒழுகினசேரி அருகில் உள்ள சோழராஜா சிவன் கோவிலில் சோமஸ்கந்தர்சாமி சிலை மற்றும் அம்மன் சிலைகள் திருடப்பட்டுள்ளது. அது தாமிரத்தால் ஆனது.

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் அர்த்த மண்டபத்தில் வடக்குபுறத்தில் உள்ள துர்க்கை அம்மன் சிலை திருடப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் அரசு கண்டுபிடித்து தர வேண்டும். கோவில்களில் கல்வெட்டுகளை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து மொழிகளிலும் எழுதி கோவில் வெளிப்பிரகாரத்தில் வைக்க வேண்டும். கோவிலை கட்டிய மன்னரின் பெயர் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பெயர்கள் மட்டுமே கல்வெட்டுகளில் உள்ளது. அதனை அகற்ற வேண்டும். சேர, சோழர், பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் தற்போது அதிகாரிகளுக்கு என்று கழிப்பிடம் உள்ளது. இதனை உடனே அகற்ற வேண்டும்.

அர்ச்சகர்களுக்கு அரசு நாள் ஒன்றுக்கு ரூ.100 சம்பளம் கொடுக்கிறது. இதை வைத்து என்ன செய்ய முடியும். வரும் காலத்தில் இதே நிலைமை தொடர்ந்தால் கோவில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள். எனவே அர்ச்சர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும். கோவில்களுக்கு மன்னர்கள் காலத்தில் கோடிக்கணக்கான நிலத்தை எழுதிக் கொடுத்து சென்றனர். ஆனால் தற்போது அறநிலையத்துறை என்ற பெயரில் உண்டியல் வைத்து மக்களிடம் பணம் வசூலிக்கிறார்கள். உண்டியல்களில் பணம் போட வேண்டாம் என சொல்லவில்லை. குறைந்தபட்ச தொகை உண்டியலில் போட்டுவிட்டு மீதமுள்ள தொகையை அர்ச்சர்களுக்கு சம்பளமாக கொடுங்கள். ஒரு கண்ணாக கோவில்களையும், மறுக்கண்ணாக கோவில் சிலைகளையும், இவை இரண்டையும் இணைக்கும் மூன்றாவது கண்ணாக உலக சிவனடியார் கூட்டமைப்பையும் நான் கருதுகிறேன். உலக சிவனடியார் கூட்டமைப்பு கூட்டத்தைக் கூட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களை புனரமைப்பு செய்வது எனது முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.