ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா மீண்டும் கைது!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலன பாரதிய ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்டை மாநிலத்தில் அதாவது ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. ஜெகனின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா ஒய்எஸ்ஆர்டிபி- ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் சந்திரசேகர ராவின் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிரான விமர்சனத்தை தனது பரப்புரை மூலம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்ஏ குறித்து அவதூறாக பேசியதாக ஆந்திர மாநில முதல்வரின் சகோதரியான ஒய் எஸ் ஷர்மிளா மீது தெலுங்கானா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானா அரசுக்கு எதிராக ஷர்மிளா தொடர்ந்து பாதயாத்திரை நடத்தி வருகிறார். இதுவரை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் அவர் தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் மகபூபாபாத் நகர் எம்எல்ஏ ஷங்கர் நாயக்கை சர்மிளா கடுமையாக விமர்சித்தார். இதனை எதிர்த்து ஆளுங்கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மகபூபாபாத்தில் உள்ள சர்மிளாவை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கூறி ஒய்எஸ் ஷர்மிளாவை அங்கிருந்து ஹைதராபாத்துக்கு அனுப்பியுள்ளனர். ஷர்மிளா கைதாவது முதல் முறை அல்ல, ஏற்கனவே மூன்று முறை தெலங்கானா காவல்துறை இவரை கைது செய்துள்ளது.