அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா நிச்சயம் தோல்வியடையும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதன்படி, ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவி வருகின்றன. போரின் இடையே உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி, ஒருமுறை அமெரிக்கா சென்று ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஜோ பைடனும் ஜெலென்ஸ்கியும் நடந்து செல்லும் விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் உக்ரைன் சென்றதை ஜோ பைடனும் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், ‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிருகத்தனமான படையெடுப்பின் ஓராண்டு நிறைவை நாம் நெருங்கி வரும் நிலையில், அதிபர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்து உக்ரைனின் ஜனநாயகம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காப்பாற்ற மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக நான் இன்று தலைநகர் கீவில் இருக்கிறேன். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு ரஷ்ய அதிபர் புதின் தனது படையெடுப்பைத் தொடங்கியபோது, உக்ரைன் பலவீனமாக இருப்பதாகவும் மேற்கு நாடு பிளவுபட்டதாகவும் நினைத்தார். அவர் எங்களை மிஞ்சலாம் என்று நினைத்தார். ஆனால், அது தவறு. இந்த போரில் ரஷ்யா கண்டிப்பாக தோல்வியடையும். புதின் மற்றும் அவரது பரிவாரங்கள் சோதிக்கப்படும். உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் கிடைக்கும். இதில் எந்த சமரசமும் இல்லை. உக்ரைனுக்கு தொடர்ந்து உதவுவதற்காக ஆலோசிக்கும்பொருட்டு இன்று கீவில் இருக்கிறேன். உக்ரைனுக்கு அடுத்த ராணுவ, நிதியுதவி குறித்து இந்த வாரத்தில் அறிவிக்க இருக்கிறேன். உக்ரைனுக்கு ராணுவ, பொருளாதார, மனிதாபிமான ஆதரவுக்கு அட்லாண்டிக் முதல் பசிபிக் வரையிலான நாடுகளின் கூட்டணியை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அந்த ஆதரவு நிலைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு அந்த நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்வது இதுவே முதல் முறையாகும். ஜோ பைடன் வருகை தருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக கீவ் நகரம் முழுவதும் ஏர் ரெய்டு சைரன்கள் ஒலித்தன. ஜோ பைடன் வருகை தந்ததும் அவரை ஜெலன்ஸ்கி வரவேற்றார். இருவரும் பேசியபடியே நடந்து சென்றனர். சாலையில் ஜோ பைடனும் ஜெலன்ஸ்கியும் நடந்து செல்ல இரு பக்கமும் ராணுவ வீரர்கள் வரிசையாக பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இரு தலைவர்களும் ரஷ்யாவுடனான போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். ஜோ பைடனின் உக்ரைன் வருகை அவர் இந்த நாட்டிற்கு அளிக்கும் ஆதரவின் முக்கிய அடையாளமாக உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யாவிற்கு ஆயுத உதவி செய்ய சீனா தயராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்ததது. இதற்கு சீனா கடுமையாக பதிலடி கொடுத்து இருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் பயணம் செய்து இருப்பது சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.