இந்துக்களிடையே கலவரத்தை தூண்டுவதுதான் பாஜகவின் ‘இந்துத்துவா’: உத்தவ் தாக்கரே

இந்துக்களிடையே கலவரத்தை தூண்டி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் இந்துத்துவா அரசியல் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

யார் உண்மையான சிவசேனா என உத்தவ் தாக்கரே அணிக்கும், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கும் இடையே நடந்து வந்த பிரச்சினைக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சிவசேனா கட்சி பெயரும், அதன் வில் அம்பு சின்னமும் ஷிண்டே அணிக்குதான் சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காலம் காலமாக தங்கள் கட்சியாக இருந்த சிவசேனா, தற்போது மாற்று அணிக்கு சொந்தமானதால் உத்தவ் தாக்கரே அணியினர் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே, பாஜக தலைவர்கள் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜகவுக்கு பச்சை துரோகம் செய்ததால் தனது கட்சியை உத்தவ் தாக்கரே இழந்துவிட்டார் என்றும், முதல்வர் பதவிக்காக இந்துத்துவா கொள்கையை விட்டுக்கொடுத்து முற்றிலும் முரணான சித்தாந்தவாதிகளுடன் கூட்டணி அமைத்ததால் இன்று அரசியல் அநாதையாக உத்தவ் மாறிவிட்டார் எனவும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பாஜகவையும் அதன் அரசியலையும் கடுமையாக சாடி வருகிறார் உத்தவ் தாக்கரே. இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:-

பாஜகவை விட்டுதான் நான் வெளியே வந்தேனே தவிர, இந்துத்துவாவை விட்டு வரவில்லை. ஏதோ தாங்கள்தான் இந்துத்துவா என்ற ரீதியில் பாஜகவினர் பேசி வருகிறார்கள். புரிந்துகொள்ளுங்கள்.. நீங்கள் (பாஜக) இந்துத்துவா அல்ல. நீங்கள் செய்வது இந்துத்துவா அரசியலும் இல்லை. இந்துக்கள் மத்தியிலேயே சண்டையை மூட்டிவிட்டு, கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் பாஜகவின் இந்துத்துவா. ஆனால், எனது தந்தை பால் தாக்கரே எனக்கு போதித்த இந்துத்துவா வேறு. எங்கள் இந்துத்துவா பாரத தேசத்துடன் தொடர்புடையது. அனைவரையும் அரவணைத்து செல்வது. கலவரம் உருவாக்குவது அல்ல.

2019 தேர்தலுக்கு முன்பு எனது வீட்டு படியேறி என்னிடம் உதவி கேட்டார் அமித் ஷா. முதல்வர் பதவியை தருகிறோம் என உறுதியளித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்க வேண்டும் என்பது பால் தாக்கரேவின் விருப்பமாக இருந்தது. அதனால்தான் அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்த உறுதிமொழியை நிறைவேற்ற மறுத்தது பாஜக. அவர்கள் முதுகில் குத்தியதால்தான் நான் கூட்டணியை முறித்து வெளியேறினேன். அடிமையாக இருந்து அதிகாரத்தில் இருப்பதை விட, மக்களுக்காக குரல் கொடுக்கும் போராளியாக இருப்பது எவ்வளவோ மேல். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.