பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற கட்டணம்: மெட்டா

டுவிட்டரைத் தொடர்ந்து பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோரின் டுவிட்டர், பேஸ்புக் போன்ற பக்கங்கள் அவர்களின் அதிகாரபூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் ப்ளூ டிக் வசதி அமைந்துள்ளது. குறிப்பிட்ட நபருடைய அதிகாரபூர்வ கணக்கு எனில் அதன் அடையாளமாக ப்ளூ டிக் இருக்கும். இந்த ப்ளூ டிக்கை கட்டணம் செலுத்தி பெறும் வசதியை டுவிட்டர் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது டுவிட்டர் பயனர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருசிலர் தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்தனர். ஆனாலும் இந்த நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.

இந்த நிலையில் டுவிட்டரைப் போன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ப்ளூடிக் பெற ஆன்ட்ராய்டு(இணையம்) பயனர்களுக்கு மாதத்திற்கு 11.99 டாலரும் ஐஓஎஸ் பயனர்களுக்கு 14.99 டாலரும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் மற்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.