பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த எனது தந்தையை இந்திரா காந்தி அப்பொறுப்பிலிருந்து நீக்கினார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அமைச்சர் ஜெய்சங்கரின் பூர்வீகம் தமிழ்நாடுதான். குடிமைப்பணி அதிகாரியான இவரது தந்தை கிருஷ்ணசாமி சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் பிறந்தார். சென்னை மாநில கல்லூரியிலும், லண்டன் பொருளியல் பள்ளியிலும் பயின்ற இவர், பன்னாட்டு போர்த்திறன் நடவடிக்கைகள் தொடர்பாக ஆழமான அறிவை பெற்றிருந்தார். இவரது நுண்ணறிவை கண்டு வியந்த ஜனதா அரசு 1980ம் ஆண்டு பாதுகாப்புத்துறை செயலாளர் பொறுப்பை இவருக்கு வழங்கியது. இந்த நினைவலைகளை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று (பிப். 21) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
நான் அரசு அதிகாரிகளின் குடும்பத்தை சேர்ந்தவன். அரசியலுக்கும் எங்களுக்கும் ஓரளவு இடைவெளியிருந்தது. இளம் வயதில் என்னுடைய நோக்கம், குறிக்கோள் அனைத்தும் வெளியுறவுத்துறை செயலாளராக ஆக வேண்டும் என்றுதான் இருந்தது. அப்போது யாராவது என்னிடம் இந்த உலகத்தில் சிறந்தது எது என்று கேட்டால் அது வெளியுறவுத்துறை செயலாளராக ஆவது என்பதுதான் என்று சொல்லியிருப்பேன். வீட்டிலும் இது குறித்து என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இதனை அழுத்தம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அப்போது இருந்த சூழல் முற்றிலும் வேறானது. அதுவரை குடிமைப்பணி அதிகாரியாக பணியாற்றி வந்த எனது அப்பா, 1980ம் ஆண்டு மத்திய பாதுகாப்புத்துறை செயலாளராக ஆனார். ஆனால், அடுத்த சில நாட்களில் ஆட்சி மாறியது. அதே ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக பொறுப்பேற்றவுடன் அவர் செய்த முதல் பணி ஜனதா அரசின் அதிகாரிகளை நீக்கியதுதான். அதில் முதல் ஆளாய் எனது அப்பா நீக்கம் செய்யப்பட்டார். அப்பா அனைத்தையும் நேர்மையாக செய்யக்கூடியவர். எனவே அதுவே பிரச்னையை ஏற்படுத்தியிருக்கலாம். எனக்கு சரியாக தெரியவில்லை. அதன் பின்னர் அவர் மீண்டும் செயலாளராக ஆகவில்லை.
இந்திரா காந்திக்கு அடுத்து ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்தார். அவருடைய ஆட்சியில் அப்பாவை விட அனுபவம் குறைந்த இளையவர் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எப்போதாவது அரிதாக நாங்கள் இதைப்பற்றி வீட்டில் பேசிக்கொள்வோம். அதன் பின்னர் எனது மூத்த சகோதரர் செயலாளராக ஆனார். இது அப்பாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. நான் செயலாளராக ஆகவில்லை. ஆனால் தூதராக ஆனேன். 2001ம் ஆண்டு தொடங்கி 2015ம் ஆண்டுவரை செக் குடியரசு, சிங்கப்பூர், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதராக பணியாற்றினேன்.
அப்பா 2011ம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர்தான் 2015ம் ஆண்டு வெளியுறவுத்துறை செயலாளரானேன். 2018ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் இருந்தேன். இதனையடுத்து 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வான நரேந்திர மோடி என்னை தொலைப்பேசியில் அழைத்தார். அது என்னால் மறக்க முடியாத தருணம். தொலைப்பேசியில் மறுமுனையில் பேசிய அவர் என்னை வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ளும்படி அழைத்தார். இந்த விஷயம் குறித்து நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தேன். பிரதமர் என்னிடம் பேசுவதற்கு முன்னரே ஒரு மாலை பொழுதில் சூரிய அஸ்தமன நேரத்தில் இது குறித்து எனது மனைவியிடம் கூறினேன், நான் அமைச்சராவதற்கு மேலும் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். இதனையடுத்து பிரதமர் போனில் அழைத்து பேசியபோது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.