ஈரோட்டில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் மண்டை உடைந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். கடந்த ஜனவரி மாதம் 4ஆம் தேதி திடீரென காலமானார். அதைத் தொடர்ந்து இரண்டரை லட்சம் வாக்காளர்களை கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு நாள் நெருங்கி வருவதால், ஈரோட்டி பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்தநிலையில் ஈரோட்டில் இன்று திமுக மற்றும் நாம் தமிழர் தொண்டர்களிடையே ஏற்பட்ட கைக்கலாப்பால் பலரது மண்டை உடைந்துள்ளது. திமுகவையும், திராவிட அரசியலையும் கடுமையாக எதிர்த்து வருபவர் சீமான். இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள திருநகர் காலனியில் கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜயநகர மன்னர்கள் முதலியார்களிடம் பட்டாடை செய்து தரக் கேட்டார்கள். ஆனால் முதலியார்கள் வேறு ஆளை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் விஜயநகர மன்னர்கள் சவுராஷ்டிராக்களை குஜராத்தில் இருந்து இறக்கினார்கள். அதேபோல் கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று விஜயநகர அரசர்கல் கேட்டபோது மறுத்துவிட்டார்கள். எனவே வேறு வழியில்லாமல் ஆந்திராவில் இருந்து மலம் அள்ள அருந்ததியர்களை இங்கு கொண்டு வந்து இறக்கினார்கள்” என்றார். சீமானின் இந்த பேச்சு பட்டியலின மக்களான அருந்ததியர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஈரோட்டில் அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிக்கு ஓட்டு கேட்க வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களை, அருந்ததிய மக்கள் விரட்டினர். மேலும் கடந்த 18ம் தேதி திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியிடையே கைகலப்பு ஏற்பட்டு மண்டை உடைப்பு சம்பவங்களும் ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் சீமான் பிரசாரம் செய்தார். மேடையில் சீமான் பேச தயாராக இருந்தார். இந்த வேளையில் வீரப்பன்சத்திரம் பகுதியில் திடீரென்று நாம் தமிழர் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றவே கைகலப்பாக மாறியது. இருகட்சியினரும் ஒருவரையொருவர் தாக்கி தொடங்கினர். மேலும் கற்களும் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்ட கம்புகளை எடுத்து இருகட்சியினரும் மாற்றி மாற்றி பரஸ்பரம் வீச தொடங்கினர்.
இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியது. இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 7 பேரின் மண்டைகள் உடைந்தன. இதையடுத்து அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மோதலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த மோதலைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேச இருந்த சீமான் பாதியிலையே அங்கிருந்து சென்ரார்.
மோதலையடுத்து அந்த பகுதியில் துணை ராணுவப் படையினர், போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு கட்சியினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினரின் மண்டைகள் உடைந்தன. நாம் தமிழர் கட்சியில் 7 பேர் காயமடைந்த நிலையில் திமுகவில் ஒருவர் காயமடைந்துள்ளதா கூறப்படுகிறது. அதோடு போலீசாரும் காயமடநை்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சீமான் தனது பரப்புரையை பாதியில் கைவிட்டு காயமடைந்த கட்சியினர் மற்றும் போலீசாரை சந்தித்து நலம் விசாரித்து ஆதரவு கொடுத்தார். மேலும் தொடர்ந்து வீரப்பன்சத்திரம் பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.