சிதம்பரம் அருகே ஆளுநர் ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சிதம்பரம் சென்றார். நேற்று நாட்டியாஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். காலை 7 மணியளவில் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். ஆளுநர் வருகையை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் சுற்றுவட்டாரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் ஆளுநர் ரவி கோயிலுக்கு வரும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான கட்சி நிர்வாகிகளில் மார்க்ஸ் குறித்த ஆளுநரின் கருத்தை கண்டித்து பதாகைகளையும், கருப்புக் கொடி மற்றும் கட்சிக் கொடிகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.