பாலில் கலந்த நீரை எவ்வாறு பிரிக்க முடியாதோ.. அதுபோல தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் அம்மா அவர்களுக்கு என்றைக்கும் அழிவே இல்லை என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
‘மக்களால் நான் மக்களுக்காகவே நான்’ என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாளினை கொண்டாடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடிமக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்ற நம் புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப இன்றைக்கும் கோடானு கோடி தமிழக மக்களின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் நம் ஜெயலலிதா. பாலில் கலந்த நீரை எவ்வாறு பிரிக்க முடியாதோ? அதுபோல தமிழக மக்களிடமிருந்து நம் அம்மாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் அம்மா அவர்களுக்கு என்றைக்கும் அழிவே இல்லை. அவர் உடலால் நம்மை விட்டு மறைந்து இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக என்று ஏதாவது ஒரு ரூபத்தில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவருடைய எண்ணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம்.
பெண்ணினத்தின் அடையாளமாக விளங்கிய சிங்கத்தலைவி, தங்கத்தாரகை, சமூக நீதி காத்த வீராங்கனை, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த இந்நன்னாளில், நம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அம்மா அவர்களின் பிறந்தநாளினை சிறப்புடன் கொண்டாடுவோம் எனஅனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.