வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று அதிமுக செயல்பட உள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பின் முதல்முறையாக அதிமுக தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர். ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிய எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதன் பின்னர் மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அதிமுக தலைமை அலுவலகம் வந்த மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தம்பிதுரை கூறுகையில், அதிமுகவில் இரட்டை தலைமை வேண்டாம். கட்சி வெற்றிப் பாதைக்கு செல்ல வேண்டும் என்றால் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று முதலில் கூறியவன் நான் தான். அந்த வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை தலைமை என்பது எந்த காலத்திலும் சரிபட்டு வராது என்பதற்காகவே நான் கூறி இருந்தேன். இந்த தீர்ப்பு மூலம் மீண்டும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒற்றைத் தலைமையாக இருந்தாலும், அனைவரிடமும் பேசிதான் முடிவு செய்வேன் என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை மக்கள் அனைவரும் அவரை ஏற்றுக் கொண்டனர். பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய கேள்விக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று செயல்பட உள்ளோம். திமுகவின் குடும்ப அரசியலையும், ஊழலையும் எதிர்த்து அரசியல் செய்வோம். நிச்சயம் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். திமுக மீது மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் அது வெளிப்பட்டு வருகிறது என்று கூறினார்.