ரெயில் பயணிகளின் கோரிக்கையை மத்திய அரசு தாமதமாக நிறைவேற்றி உள்ளது: டி.ஆர்.பாலு

நீண்ட தாமதத்துக்கு பிறகு ரெயில் பயணிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக்கொள்ள முயற்சிப்பது சரியல்ல என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் வியாழக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரெயில் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இடையில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். அதிநவீன சொகுசு வசதிகள் இருப்பதோடு, பயண நேரமும் குறைவு என்பதால் இந்த ரெயிலை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தென்மாநில மக்கள் பயன்பெறும் வகையில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று மத்திய ரெயில்வே அமைச்சகம் சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் என அறிவித்தது. அதன்படி நேற்று முதல் தாம்பரம் ரெயில் நிலையத்தில் தேஜஸ் விரைவு ரெயில் நின்று சென்றது. இதற்கான விழா தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடந்தது. காலை 6 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.25 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. அதில் பயணிகள் ஏறினர். பின்னர் 2 நிமிடத்துக்கு பிறகு 6.27 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. இதனை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் கணேஷ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.சந்திரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்படி இனிமேல் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு காலை 6.25 மணிக்கு வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 நிமிடம் நின்று காலை 6.27 மணிக்கு மதுரை புறப்பட்டு செல்லும். மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 8.38 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் வரும் ரெயில் 8.40 மணிக்கு எழும்பூருக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. கூறியதாவது:-

செங்கல்பட்டு தாம்பரம், 2019-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே சென்னை-மதுரை-சென்னை வழித்தடத்தில் செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரம் நிலையத்தில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை ரெயில் வாரியத் தலைவர் வினோத் யாதவிடம் நான் கடிதம் வாயிலாக கொடுத்தேன். அதன்பிறகு 04-12-2019 அன்று நாடாளுமன்ற மக்களவையில் இந்த கோரிக்கை தொடர்பாக எழுந்த விவாதத்தில் எனக்கும், அப்போதைய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் அமளி உருவானது. கேள்வி நேரம் முடிந்த பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, என்னையும், பியூஸ் கோயலயும் தனது அறைக்கு அழைத்து சமாதானம் செய்ததுடன், எனது வேண்டுகோளை நிறைவேற்றிட உதவுமாறு மந்திரியிடம் குறிப்பிட்டார். இந்த கோரிக்கை தொடர்பாக அப்போதைய தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமசுக்கு 02-01-2020 அன்று நான் கடிதம் எழுதினேன். தமிழ்நாடு சம்பந்தப்பட்ட ரெயில்வே திட்டங்கள் குறித்து தமிழக எம்.பி.க்களின் கோரிக்கைகளை தொகுத்து, தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு 11.10.2021 அன்று மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. இந்த முயற்சிகளை தொடர்ந்து 21.02.2022 அன்று ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நாடாளுமன்ற வளாகத்தில் நான் நேரில் சந்தித்து நிலுவையில் உள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும் கோரிக்கை பற்றி வலியுறுத்தி கடிதம் ஒன்றையும் கொடுத்தேன். இவ்வாறு ஏறத்தாழ 4 ஆண்டுகளாக அயராமல் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூர்-மதுரை இடையே இருமார்க்கங்களிலும் தாம்பரத்தில் நின்று செல்லும் என்று மத்திய ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென் தமிழகத்துக்குச் செல்லும் பல லட்சம் ரெயில் பயணிகள் இன்று (அதாவது நேற்று) முதல் தாம்பரம் ரெயில் முனையத்தில் இருந்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையின் மூலம் பயனடைவார்கள்.

நீண்ட தாமதத்துக்கு பிறகு மத்திய அரசு லட்சக்கணக்கான ரெயில் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதை பெரிய சாதனையாக ஒரு சிலர் காட்டிக்கொள்ள முயற்சிப்பது சரியல்ல. இல்லையென்றால், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சேதுசமுத்திரத்திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, சென்னை துறைமுகம் – மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை, ‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்சினை, ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடைச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளில் இவர்கள் தலையிட்டு செய்து காட்டியிருக்கலாமே. ஏன் செய்யவில்லை?, தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழா தாம்பரத்தில் குறித்த நேரத்தில் நடைபெறவில்லை. ரெயில்வே துறை இதை முறையாக செய்யவில்லை. மேடையில் இருட்டாக இருந்தது. எங்கள் பெயரெல்லாம் தெரியாத அளவு இருக்கைகள் போட்டு மறைக்கப்பட்டு இருந்தது. அதனால் நான் பேசவில்லை. ரெயில் புறப்பட்டு சென்ற பிறகு மத்திய மந்திரி பேசுவார் என அறிவிக்கிறார்கள். ரெயில்வே அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் முறைகேடுகளை செய்தனர். ரெயில்வே அதிகாரி ஆங்கிலத்தில் பேசுகிறார். மக்களுக்கு புரிகிற அளவில் அவர் தமிழில் பேசி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.