முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு கமல்ஹாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
கட்சி தொடங்கியது முதல் பல தேர்தல்களில் தனித்துக் களமிறங்கிய கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்தார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் மநீம கூட்டணி அமைக்கும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், மேலும் மேலும் திமுகவுடன் நெருங்கி வருகிறார் இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை வழங்கினர். இந்த அழைப்பிதழை ஏற்றுக்கொண்ட மநீம தலைவர் கமல்ஹாசன், விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஆண்டு தோறும் திமுகவினரால் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கட்சி கொடி ஏற்றியும், கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சிறப்பாக கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் வருகிற 28-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் கடந்து வந்த பாதை என்கிற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சேகர்பாபு மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு நேற்று அழைப்பு விடுத்துள்ளனர். கமல்ஹாசனை சந்தித்து அழைப்பு விடுத்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலினின் சிறுவயது முதலான அரிய புகைப்படங்கள் இடம்பெறும். புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பதற்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வருகை தருவது திமுகவினருக்கு பெருத்த மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.