மணிஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைதான துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லியில் கடந்த 2021 -ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் கொடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதில் பல்வேறு முறைகேடு புகார்களும் எழுப்பப்பட்டது. துணை நிலை ஆளுநர் விகே சக்சேனாவுக்கு புகார்கள் சென்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து ஆம்ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றுக்கொண்டது. இருந்த போதிலும், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜரானார். சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. நேற்று மணிஷ் சிசோடியாவை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியது. மணிஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, சிபிஐ கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வரும் மார்ச் 4 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.