ரஷ்ய அதிபர் புடின் விரைவில் கொல்லப்படுவார். அதுவும் அவருக்கு நெருக்கமானவர்களே விரைவில் கொலை செய்வர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாடு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணையவிருப்பதாக அறிவித்த உடன் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி, ரஷ்யா போரை தொடங்கியது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிடப்பட்ட பலகட்ட தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. சோவியத் ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளை சிதைக்க அமெரிக்கா திட்டமிடுவதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. மேலும் உக்ரைன் ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தது. சோவியத் யூனியன் பிளவுபட்டபோது உக்ரைன் மற்றும் ரஷ்யா தனி நாடானது. எனவே வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதிதான் உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் உக்ரைன் அமெரிக்க சார்பு நிலை எடுத்ததால் ரஷ்யா வெகுண்டெழுந்து போரை தொடங்கியது. ரஷ்யாவின் எல்லையில் தனது தலைமையிலான ராணுவ தளத்தை நிலை நிறுத்த அமெரிக்கா பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது. கம்யூனிச நாடான ரஷ்யாவின் தீவிர எதிரியாக முதலாளித்துவ நாடான அமெரிக்கா இருந்து வருகிறது. ரஷ்யாவை துண்டாக்கி அங்கு முதலாளித்துவ ஆட்சி மலர வேண்டும் என அமெரிக்கா தனது ஏகாதிபத்திய வேலைகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் உக்ரேனை அமெரிக்கா தூண்டி விட்டு அதிகளவிலான ஆயுதங்களை வழங்கி வருகிறது என்பது சர்வதேச அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
போர் தொடங்கி ஓராண்டு நிறைவடந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் வழங்கினார். இது போரை நிறுத்தும் வழியல்ல, மேலும் போரை நீட்டிப்பதற்கான முயற்சி என ரஷ்யா குற்றம்சாட்டியது. மேலும் ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால் என்ன ஆனாலும் சரி, அமெரிக்காவின் திட்டத்தை முறியடித்து உக்ரைனை மண்டியிட வைக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் தீவிரமாக உள்ளார். மேலும் உக்ரைனின் தற்போதைய ஆட்சியாளர்கல், ஹிட்லரின் நாஜிப்படைகளில் நவீன வடிவான நியோ நாஜிக்கள் எனவும், அதனால் அவர்கள் ஹிட்லரின் ஸ்வஸ்திக் அடையாளத்தை தங்கள் ராணுவ சீருடையில் வைத்துள்ளதாகவும் ரஷ்யா கூறுகிறது. நாஜிக்களை சோவியத் தலைவர் ஸ்டாலினின் செம்படை அழித்தது போன்று புடினின் படை நியோ நாஜிக்களை அழிக்கும் என ரஷ்யா உறுதியுடன் முன்னேறி வருகிறது.
ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவு தெரிவித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கும் பட்சத்தில் ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்கள் வழங்கும் என தகவல்கள் வெளியானது. இது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு பேரிடியாக இருந்தது. இப்படி போரும் அது சார்ந்த நடவடிக்கைகளும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புடின் தனது சொந்த அதிகாரிகளாலயே கொல்லப்படுவார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அதை ஆவணப்படுத்தும் விதமாக உக்ரைன் சார்பில் ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:-
புடினின் ஆட்சியின் பலவீனம் ரஷ்யாவிற்குள் உணரப்படும் ஒரு தருணம் நிச்சயம் வரும். பின்னர் வேட்டையாடுபவரை இன்னொரு ஒரு வேட்டையாடுபவர் விழுங்குவார். ஒரு கொலையாளியைக் கொல்ல ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் ஜெலென்ஸ்கியின் வார்த்தைகளை நினைவு கூர்வார்கள். அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். கொலையாளியைக் கொல்ல ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள். எப்பொழுது? எனக்கு தெரியாது. ஆனால் சொந்த அதிகாரிகளாலேயே புடின் கொல்லப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து 40 கோடி அமெரிக்க டாலர் உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஏற்கனவே உக்ரைனுக்கு ஐரோப்பிய, மேற்கத்திய நாடுகள் பொருளாதார ரீதியிலும், ஆயுதங்களை வழங்கியும் ஆதரவு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டுக்கு நேரில் சென்று உதவிக்கரம் நீட்டியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இதில் வளைகுடா நாடுகளில் ஏற்கனவே சவுதி அரேபியா தனது ஆதரவை தெரிவித்தது. அதற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதியளித்தார். மேலும் உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் அனைத்து விதமான முயற்சிகளும் தொடரப்படும் என அறிவித்தார்.
இதற்காக தற்போது சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத் உக்ரைன் சென்றுள்ளார். அங்கு கீவ் நகரில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு அதிபர் முன்னிலையில் உக்ரைன் நாட்டுக்கு மனிதாபிமான மற்றும் பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதற்கு நிதி உதவி செய்யும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தில் சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத் மற்றும் உக்ரைன் வெளியுறவு மந்திரி ஆண்ட்ரிய் எர்மேக் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதில் சவுதி அரேபியா சார்பில் உக்ரைனுக்கு 40 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.