ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார். எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ முருகன். இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலாளராக உள்ளார். இவரது இல்ல திருமண விழாவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்றார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தல் முடிவு என்பது எல்லாருக்கும் தெரிந்த முடிவு தான். தமிழ்நாட்டில் 1989 மதுரை கிழக்கு, மருங்காபுரி, 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தான் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. நான் ஆர்கே நகர் தேர்தலில் சுயேச்சையாகவே வெற்றி பெற்றிருக்கிறேன். மற்றபடி அனைத்து இடைத்தேர்தல்களிலும் ஆளும்கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டால் தொகுதிக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற எண்ணம் இயற்கையாகவே உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கில் மக்கள் ஓட்டுபோட்டுள்ளனர். இடைத்தேர்தல்களில் இதுவரை கேள்விபடாத அளவுக்கு மக்களுக்கு திமுக அமைச்சர்கள், திமுகவினர் சர்வீஸ் செய்துள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கில் கிடைத்த வெற்றியும், வாக்கு வித்தியாசம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இது நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டசபை தேர்தலிலோ பிரதிபலிக்காது.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடன் இருந்தவர்கள் ஆணவம், ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமிரில் உள்ளனர். தற்போது உச்சநீதிமன்றம் இரட்டை இலை கொடுக்காமல் இருந்தால் இன்னும் அவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். திமுகவுக்கு இணையாக அதிமுகவினர் பொருட்செலவு, பணசெலவு செய்தாலும் கூட இந்த அளவு தான் வாக்கு பெற்றுள்ளனர். இரட்டை இலை இல்லாமல் இருந்திருந்தால் அதிமுகவின் நிலைமை என்பது இன்னும் மோசமாகி இருக்கும்.
ஜெயலலிதா 1989 தேர்தலில் சேவல் சின்னத்தில் நின்று 28 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஈரோட்டில் 5 அல்லது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஆனால் இரட்டை இலை இல்லாமல் கூட நாங்கள் போட்டியிடுவோம் என எடப்பாடி பழனிச்சாமி வீரவசனம் பேசினார். இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை உச்சநீதிமன்றம் அவரிடம் திணித்தது. இருப்பினும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதற்கு ஒருசிலர் வேண்டுமானலும் தடையாக இருக்கலாம். அவர்களும் துடைத்தெறிக்கப்படுவார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணம். மத்திய அரசின் உதவியோடும், பணபலத்தோடும் அவர் தனது ஆட்சியை தக்கவைத்தார். ஒரு கட்சியில் துரோகம் இழைக்கப்பட்டதால் எம்ஜிஆர் கட்சியை துவங்கிய நிலையில் அதன்தலைவர் பதவியில் துரோகத்தின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்துள்ளார். இதற்கு காலம் நிச்சயம் நல்ல தீர்ப்பு தரும். 2,600(பொதுக்குழு உறுப்பினர்கள்) பேரை வசப்படுத்தி வைத்து கொண்டு தொண்டர்கள் பின்னால் உள்ளதாக மட்டும் கூறினால் உண்மையான தலைவராக இருக்க முடியாது. மேற்கு பகுதி அதிமுகவின் கோட்டை எனக்கூறிய எடப்பாடி பழனிச்சாமி தற்போது கோட்டை விட்டுள்ளார். 2021 தேர்தலை காட்டிலும் அவர் குறைந்த அளவில் ஓட்டு பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
