ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அவராகவே வாயைக் கொடுத்து கெட்டார் ராகுல் எனத் தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில், எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ராகுல் காந்தி. இந்த நடவடிக்கை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று காங்கேயம் அருகே பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் பிரசாரத்தில் ராகுல், நீரவ் மோடியை திட்ட வேண்டும் என்பதற்காக மோடி எனும் சமுதாயத்தினர் எல்லாம் பிராடு என பேசியதால் அந்த சமுதாயத்தில் இருந்த ஒரு பெரியவர் ராகுல் அவதூறாக பேசியதாக வழக்கு தொடர்ந்தார். இது பாஜக அரசாங்கம் போட்ட வழக்கு அல்ல, குஜராத் அரசு போட்ட வழக்கு அல்ல, பாஜக நபர்கள் போட்ட வழக்கும் அல்ல. மோடி என்ற சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்காக அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் போட்ட வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்துள்ளது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது. சட்டம் என்பது அனைவருக்கும் பொருந்தும். அந்த அடிப்படையிலேயே ராகுல் காந்திக்கு தண்டனை கிடைத்துள்ளது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அப்படி கெட்டார் ராகுல். இவ்விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதே கிடையாது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சொல்வதற்கும், அரசு செயல்படுத்துவதற்கும் எந்த உண்மையும் இல்லை. கடந்த முறை 2000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வாங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். அது குறித்து இந்த முறை பேசவே இல்லை. இந்த முறை மீண்டும் 1000 பேருந்துகள் வாங்குவதாகவும், 500 பேருந்துகளை புதுப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பெயருக்கு பட்ஜெட்டை வாசித்துள்ளார் நிதி அமைச்சர். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்களுக்கு பயனில்லாத பட்ஜெட். பட்ஜெட்டுக்கும் அவர்களுடைய செயல்பாட்டிற்கும் சம்மந்தமில்லை. பட்ஜெட் குறித்து சுக்குமி, லகதி, திப்புலி என அமைச்சர் வாசிக்கிறார். சென்றமுறை 243 கோடி ரூபாய் கூட்டுறவுத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை கூட்டுறவிற்கு ஒன்றுமே ஒதுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.