எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்!

ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இன்று ஒன்று திரண்டு நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களும் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி தொடர்பான பேச்சுக்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, புதுவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கறுப்பு உடை அணிந்து இன்று சபையில் பங்கேற்றனர்.

இதனிடையே ராகுல் காந்தி விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விவாதிக்க டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடத்திய இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, திமுக டிஆர் பாலு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்திலும் காங்கிரஸ், திமுக தலைவர்கள் கறுப்பு உடையுடன் பங்கேற்றனர். மேலும் முதல் முறையாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஜேடியூ, பிஆர்எஸ், சிபிஎம், ஆர்ஜேடி, என்சிபி, சிபிஐ, ஐயூஎம்எல், மதிமுக, கேரளா காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒருங்கிணைந்து கறுப்பு உடையுடன் சென்றனர். நாடாளுமன்றம் கூடியதும் இரு சபைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்ப தொடங்கினர். உடனடியாக இரு சபைகளும் மாலை 4 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.

இதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர். இந்தப் பேரணியின் போது ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் பிரதமர் மோடி- அதானியை குறிப்பிடும் வகையில் மோதானி என்கிற பதாகைகளையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கைகளில் ஏந்தி இருந்தனர். இப்போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகித்தார். சோனியா காந்தி, டிஆர்பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். இப்போராட்டத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இணைந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

காலின் கீழே போட்டு ஜனநாயகம் நசுக்கப்பட்டு உள்ளது. இதனை வெளிப்படுத்தவே, எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்திருக்கிறோம். நாட்டில் ஜனநாயகத்திற்கு பிரதமர் மோடி முடிவு கட்டி வருகிறார். முதலில் அவர், சுயாட்சி அமைப்புகளை காலி செய்த பின்னர், தேர்தலில் வெற்றி பெற்றவர்களை மிரட்டி அவர்களது சொந்த அரசாங்கங்களை கொண்டு வந்தனர். அதன்பின்னர், அரசுக்கு முன்னால் அடிபணியாதவர்களை வளைப்பதற்காக, அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.