காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வன்முறை தொடர்பாக கனடா தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி உள்ளது.
பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்குக்கு எதிரான காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த வாரம் கனடாவுக்கான இந்திய தூதர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் வன்முறை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்திரிகையாளர் சமீர் கவுஷல் என்பவர் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார். அதோடு கனடாவில் காந்தியின் சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்.
இந்நிலையில், கனடாவில் இந்திய தூதரகத்துக்கு எதிராகவும், தூதரக நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயல்படும் பிரிவினைவாத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான கனடா தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் இந்திய பத்திரிகையாளர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரளாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி நிறுவத்தின் நிருபர் லலித் கே ஜா அங்கு சென்றிருந்தார். அப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடுமையான வார்த்தைகளால் அவரை வசைபாடினர். ஒரு கட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் லலித்தை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்க தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் இருந்து லலித்தை மீட்டு காப்பாற்றினர். இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.