மதுரையில் வைகை இலக்கிய திருவிழா 2023 தொடக்கம்!

மதுரையில் வைகை இலக்கிய திருவிழா 2023 தொடக்க விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் உலக தமிழ் சங்க கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறை, நூலக துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து வைகை இலக்கிய திருவிழா 2023-ஐ நடத்தியது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு பிறகு முதன்முதலாக நெல்லை மாவட்டத்தில்தான் இலக்கியவிழா நடைபெற்றது. அடுத்தப்படியாக சென்னை, கோவை, தஞ்சையில் நடந்தது. அதனையும் தாண்டி மதுரை உலக தமிழ் சங்கத்தில் இவ்விழா நடைபெறுவது பொருத்தமானது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கீழடி 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க காலத்தில் பெருமை வாய்ந்ததாக வைகை நதி பேசப்படுகிறது. வைகையின் சிறப்புகளை எடுத்துச்சொன்னது இலக்கியவாதிகளும், அவர்களது படைப்புகளும்தான். அதனால்தான் வைகை இலக்கியவிழா என்று இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். 256 கி.மீ. நீளமுள்ள வைகை நதிக்கரையில் அமைந்துள்ள சுமார் 293 கிராமங்களில் தொல்லியல் எச்சங்கள் இருக்கின்றன என்பதை பார்க்கும் போது வைகை நதிக்கரையோரம் என்பது மிகவும் முக்கியமானதாகும். அறிவியல் மூலமாக நிரூபிக்கக்கூடிய ஒரே மொழி, ஒரே இனம் தமிழும், தமிழனும்தான். இவ்விழாவிற்கு வருகை தந்துள்ளவர்கள் கண்டிப்பாக கீழடி அகழாய்வு மையத்திற்கு செல்லவேண்டும். சங்ககால இலக்கியத்திலும், பக்தி இலக்கியங்களிலும் நவீன கால இலக்கியங்களிலும் மதுரையை சேர்ந்தவர்களே கொடிகட்டி பறக்கிறார்கள். இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும் போற்றக்கூடிய வகையில் விழாவை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-

தமிழர்களுடைய பாரம்பரியமும் மதுரையில் இருந்துதான் ஆரம்பித்துள்ளது. மதுரையில் தான் முதன்முதலாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. கீழடி அகழாய்வு தமிழர்களுடைய பாரம்பரியத்தை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளது. ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகள் இப்போது தனியார் பள்ளிகளைவிட திறமை வாய்ந்ததாக மாறியுள்ளது என்றார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், எந்த இனத்திற்கும் மொழிதான் அடையாளமாகவும், முக்கிய அங்கீகாரமாகவும் இருக்கிறது. அதிலும் நம் மொழி, நம் இனம், நம் கலாசாரம், நம் பண்பாடு எவ்வளவு சிறப்பானது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பது மொழி. ஒரு மொழியின் சிறப்பை வெளிப்படுத்துவது இலக்கியம். அந்த இலக்கியம் அனைத்து தலைமுறைக்கும் சென்றடைய வேண்டும். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 5 இடங்களில் நடத்த சுமார் ரூ.5 கோடி ஒதுக்கினோம். இந்த ஆண்டு பல இடங்களில் நடத்துவதற்கு ஏதுவாக ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளோம். இந்தியாவில் மொழி அடிப்படையில்தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. பல மாநிலங்களுக்கு தமிழ்நாட்டை விட கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்றார்.