மாநில அரசுகளை பாரபட்சமாக நடத்தும் மத்திய அரசு: மம்தா பானர்ஜி!

மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு 29-ம் தேதி மதியம் தர்ணா போராட்டத்தை தொடங்கினார். மகாத்மா காந்தி ஊரக வேலை (100 நாள்), அனைவருக்கும் வீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காததைக் கண்டித்து 30 மணி நேர போராட்டத்தைத் தொடங்கினார். அவருடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 29-ம் தேதி இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டார். இந்நிலையில் 2-வது நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. நேற்று மாலையுடன் போராட்டத்தை முடித்துக் கொண்டார். மம்தா பானர்ஜி நேற்று பேசியதாவது:-

மத்திய அரசு கூட்டாட்சி நடைமுறையை சீரழிக்கிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளை பாரபட்சமாக நடத்துகிறது. ஜிஎஸ்டி என்ற பெயரில் கொள்ளையடிக்கிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை நிறுத்தி விட்டது. எங்களை நாட்டுக்கு எதிரானவர்கள் என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். தங்களுக்கு மட்டுமே நாட்டுப்பற்று இருப்பதாக கூறுகிறார்கள். அவர்களை எதிர்த்து நாங்கள் போராடுவோம்.

தங்களை நிலப்பிரபுக்களாக கருதிக்கொள்ளும் பாஜகவினர், போராட்ட செய்தியை ஒளிபரப்பக்கூடாது என செய்தி சேனல்களை கட்டாயப்படுத்துகின்றனர். ஜனநாயகத்தின் 4-வது தூணாக ஊடகத் துறை விளங்குகிறது. ஆனால் பாஜக ஜனநாயகத்தை அழித்துவிட்டது. பாஜகவுக்கு எதிராக பேசுபவர்கள் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் மிரட்டப்படுகிறார்கள். பாஜகவுக்கு எதிராக பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.