திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருவான்மியூரில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனம் உள்ளது. இது 1936ம் ஆண்டு ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் ஒன்றிய அரசு இதை தன்னாட்சி அமைப்பாக அறிவித்தது. இதற்கு, ஒன்றிய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. இங்கு பேராசிரியர் ஒருவர் நீண்ட நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக அந்நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் கொடுத்து வந்தனர். ஆனால், நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததால், சோஷியல் மீடியாவில் மாணவிகள் குற்றசாட்டுகளை பகிரங்கப்படுத்தி இருந்தனர். இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், இது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கலாஷேத்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் ஒரு பெண், தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பேராசிரியர் மீது தவறாக பாலியல் புகார் அளித்துள்ளனர் என மனு அளித்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில், விசாரணை நடத்திய பிறகு, அங்கு பாலியல் தொந்தரவு யாருக்கும் நடக்கவில்லை என்று, தேசிய மகளிர் ஆணையம் காவல்துறை விசாரணைக்கான உத்தரவை வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் தொடர்ந்து புகார் அளித்தும், சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டும், விசாரணை நடத்த வேண்டிய தேசிய மகளிர் ஆணையம் திடீரென புகாரை வாபஸ் பெற்றது, மாணவிகளிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக பணியாற்றி வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயங்குவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி நேற்று கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகள் அனைவரும், தங்களது பதாகைகளை ஏந்தி, நேற்று 10 மணி நேரத்துக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
பேராசிரியர் மீது முறையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உறுதியான பதில் அளிக்காத நிலையில் போராட்டம் தொடரும் என மாணவிகள் தரப்பில் நேற்று இரவு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ், கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா நிர்வாகம் வரும் 6ம் தேதி வரை கல்லூரிக்குவிடுமுறை அறிவித்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் குறித்து மாணவிகள் கூறியதாவது:-
பாலியல் தொந்தரவு பிரச்னைக்காக, காலையில் இருந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இந்நிலையில் நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் ஏப்ரல் 6ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், விடுதியை உடனே காலி செய்து விட்டு செல்லும்படி கூறியுள்ளனர். தற்போது தேர்வு நடைபெற்று வருகிறது. 12ம் தேதிக்கு மேல் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறார்கள். உடனே போக வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் எங்கே போவது. 90 சதவீத மாணவர்கள் வெளியில் இருந்து வந்து தான் படிக்கின்றனர். நாங்கள் காலையில் இருந்து போராட்டம் செய்து கொண்டு இருக்கிறோம். ஆனாலும், கல்லூரியின் இயக்குநர் மற்றும் நிர்வாகம் சார்பில் இதுவரை எங்களை சந்தித்து பேச மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. 4 பேரை காப்பாற்ற, எங்களை இந்தளவுக்கு கொடுமை படுத்துகிறார்கள். கலாஷேத்ராவில் இதுவரை போராட்டம் என்பதே நடந்தது இல்லை. இதுதான் முதல் முறை. 2018ல் இருந்து இதுபோன்ற பாலியல் தொந்தரவு தொடர்ந்து மாணவிகளுக்கு நடந்துள்ளது. எவ்வளவுதான் நாங்கள் பொறுத்துக் கொண்டு செல்வது. தற்போது சமூகவலைதளம் இருப்பதால் இந்த பிரச்னைகள் வெளியில் தெரியவந்துள்ளது என்றனர்.
அதேநேரத்தில், போலீஸ் அதிகாரிகள் போராட்டம் நடத்திய மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தனி அறைக்கு அழைத்து சென்றனர். பின்னர் வெளியில் வந்து மாணவிகள் கூறுகையில், எங்களுடைய கோரிக்கைளை இயக்குநரிடம் கூறினோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். 12ம் தேதி தான் தேர்வு முடிகிறது. இப்போதே போக சொல்கிறார்கள். மேலும் பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர்கள் யாரும் இனிமேல் பாடம் எடுக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளனர். திரும்ப வரும் போது இதுபோன்று இருக்காது என்று கூறுகிறார்கள், அதை நம்புகிறோம். ஆசிரியர்கள் யாரையும் சஸ்பெண்ட் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, தற்போது நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். எனவே வீட்டிற்கு சென்று 2 மாதம் கழித்து வரும் போது கல்லூரி இதுபோன்று இருக்காது என்று கூறியுள்ளனர். மேலும் சஞ்சித் ராய், சாய்கிருஷ்ணா, ஸ்ரீநாத் ஆகிய மூன்று பேரையும் இனி வகுப்புகள் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்துவதாக கூறியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
டெல்லியில் இருந்து தேசிய மகளிர் ஆணைய தலைவி கலாஷேத்ராவிற்கு வந்து விசாரணை நடத்தி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது அவருக்கு போலீசார் தரப்பில் பாதுகாப்பு வேண்டுமா என்று கேட்ட போது பாதுகாப்பு எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளதாகவும், ஆனால் வாகனத்திற்கு மட்டும் பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரிக்காமல் மொத்தமாக விசாரித்ததால் நடந்த பாலியல் தொந்தரவு பற்றி மாணவிகள் எதுவும் கூறாமல் இருந்துள்ளனர். அப்போது சில மாணவிகள் அவரிடம் தனியாக வந்து புகார் அளிக்க முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரகசியமாக விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூத்த ஆசிரியர் மீது 100க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பாலியல் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பாலியல் தொந்தரவு செய்த மூத்த ஆசிரியருக்கு மார்ச் 8ம் தேதி கலாஷேத்ரா நிர்வாகம் அவரை கவுரவித்து விருது வழங்கி மரியாதை செய்துள்ளது. இதனால், மாணவிகள் ஆதங்கம் அடைந்துள்ளனர். அதன்பிறகு வலைதளங்களில் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் மற்றும் பாலியல் தொந்தரவு செய்த மூத்த ஆசிரியரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பாலியல் தொந்தரவு குறித்து விசாரணை நடத்தி முறையாக நடவடிக்கை எடுக்காத நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை திருப்திகரமாக இல்லையென்றால் தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.