ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஆர்கே சுரேஷ். 2015ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து மருது, ஹரஹர மகாதேவகி, ஸ்கெட்ச், காளி, புலிக்குத்தி பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை, விசித்திரன், விருமன், பட்டத்து அரசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நடத்திய பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆருத்ரா கோல்டு நிறுவனம் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்டிருந்த அந்த நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதனை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் 2,438 கோடி ரூபாய்யை மக்களிடம் இருந்து பெற்ற ஆருத்ரா நிறுவனம் அந்த பணத்தை மோசடி செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 8 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பான விசாரணையில் இருந்து தப்பிக்கதான் நடிகர் ஆர்.கே.சுரேஷ் 2 மாதமாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் ரூசோ கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஆர்கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.