தமிழ் மொழி என்பது தாய் மொழி. அண்ணா இதற்காகத் தான் இரு மொழி கொள்கையைக் கொண்டு வந்தார். அண்ணா இரு மொழி கொள்கையே போதும் என்பார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 9வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. ஒவ்வொரு துறையிலும் மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்து, அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். அமைச்சர் பொன்முடி இரு மொழி கொள்கை குறித்து விளக்கினார். மேலும், பல விஷயங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார். அவர் சட்டசபையில் பேசியதாவது:-
உயர் கல்வித்துறையைப் பொறுத்தவரைக் கடந்தாண்டு 5668 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அதை விட 1200 கோடி கூடுதலாக 6968 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர் கல்வி வளர்ச்சியடைய வேண்டும். ஆரம்பக் கல்வி என்பது அடிப்படை. அதற்கு அடுத்து உயர் கல்வி வளர வேண்டும். முதல்வர் கூட அடிக்கடி சுகாதாரமும் கல்வியும் தனது இரு கண்கள் என்றே சொல்வார். ஆரம்பக் கல்வி வளர காரணமாக இருந்தவர் காமராஜர். உயர் கல்வி வளர காரணமாக இருந்தவர் கருணாநிதி. தனது ஆட்சி உயர் கல்வித் துறையின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்பதை முதல்வரின் விருப்பம். இதை அவரே பல முறை சொல்லியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை விகிதம் 51.6%ஆக உயர்ந்துள்ளது. தேசிய சராசரியே 27% தான். ஆனால், அதை விடத் தமிழ்நாடு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. காமராஜர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் நடவடிக்கையால் தான் இது உயர்ந்துள்ளது.
எண்ணிக்கை மட்டும் போதாது கல்வியின் தரத்தையும் மாணவர்களின் திறனையும் உயர்த்தவே இப்போது நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படிப் பல நடவடிக்கைகளைச் சொல்லலாம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை நாங்கள் கொண்டு வந்தோம் என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். ஆனால், அதுவுமே நீதிமன்றத்தில் தான் இருந்தது. இந்த அரசு வந்த பின்னரே, சுப்ரீம் கோர்ட் சென்று அதை வாங்கிக் கொடுத்தோம். பொறியியல் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் இதை விரிவுபடுத்த வேண்டும் என்பதை எங்கள் விருப்பம்.
தமிழ் மொழி என்பது தாய் மொழி. அண்ணா இதற்காகத் தான் இரு மொழி கொள்கையைக் கொண்டு வந்தார். அண்ணா இரு மொழி கொள்கையே போதும் என்பார். ஒரு தமிழ்த் தாய் மொழி, அடுத்து ஆங்கிலம் அது சர்வதேச மொழி. அண்ணா ஒரு உதாரணமே சொல்வார். ஒருவர் தனது வீட்டில் பெரிய ஓட்டையைப் போட்டாராம். பக்கத்து வீட்டில் இருப்போர் எதற்கு இந்த ஓட்டை என்று கேட்டதற்கு, “இது பூனை செல்ல போடப்பட்ட ஓட்டை என்றாராம். மறுநாள் அதைவிடச் சின்ன ஓட்டை போட்டாராம். அது எதற்கு என்று கேட்டால், “இது பூனைக் குட்டிப் போகப் போட்ட ஓட்டை” என்றாராம். நினைத்துப் பாருங்கள். பூனை போகும் ஓட்டையில் பூனைக் குட்டிப் போகாதா என்று கேட்டார் அண்ணா.. ஆங்கிலம் என்ற சர்வதேச மொழி இருக்கும் போது நமக்கு இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகள் தேவையில்லை.
இப்போது கூட பாருங்கள்.. தயிருக்கு தஹி என்று போட வேண்டும் என்கிறார்கள். நாளை சாப்பாட்டுக்குக் கூட கானா ஹயா ஹே என்பார்கள். முதல்வரின் எதிர்ப்பால் அதை வாபஸ் பெற்றுள்ளனர். இதிலேயே மொழியைத் திணிக்க விரும்புவோர் மற்ற இடங்களில் சும்மாவா இருப்பார்கள். புதிய கல்விக் கொள்கையிலும் இந்தியைத் திணிக்கப் பார்த்தார்கள். அதன் அடிப்படையிலேயே மாநில கல்விக் கொள்கை அமைக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளை கற்பிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. யாருக்கு என்ன வேண்டுமோ அதைப் படிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.