ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, மத்தியில் ஆள்பவர்கள் தான் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க மத்தியில் ஆள்பவர்களால் மட்டுமே முடியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பதால் தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பலவீனப்பட்டுக்கொண்டு இருக்கிறது. வருங்காலத்தில், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒருங்கிணைந்து கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுப்போம். எம்.ஜி.ஆர் அவருக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை தட்டிக்கேட்கத்தான் அதிமுகவை தொடங்கினார். அப்படிப்பட்ட கட்சியில் ஈபிஎஸ் துரோகத்தின் மூலம் பதவியைப் பெற்றுள்ளார். அதற்கான பதிலை அவர் சொல்லித்தான் ஆகவேண்டும்.
அதிமுக வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை. இது நீண்ட நெடிய சட்டப் போராட்டம். இதுவரை 2,3 ரவுண்டுகளில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வழக்கில் வெற்றி பெற்றதன் மூலமாகவே எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது. பண பலம், ஆட்சி அதிகாரம் கையில் இருந்த செல்வாக்கால் அவர் கட்சியை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். அதிமுக இன்று பழனிசாமி என்ற சுயநலவாதியிடம் சிக்கித் தவிக்கிறது. இரட்டை இலை சின்னம் இருப்பதால் தொண்டர்கள் அங்கு இருக்கிறார்கள். கூடிய விரைவில் அவர்கள் வெளியேறுவார்கள்.
அமமுக பாஜக கூட்டணியில் இணையுமா என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் பாஜக தான் காரணம். மத்தியில் ஆள்பவர்கள் தான் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க மத்தியில் ஆள்பவர்களால் மட்டுமே முடியும். மத்தியில் ஆள்பவர்கள் நினைத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை சேர்த்து வைக்கலாம்.
ஆன்லைன் சூதாட்டங்களால் அண்மையில் கூட ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி. அரசியலமைப்பு அவருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தையும், மத்திய அரசுடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தையும் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் ஒப்புதல் அளித்து அதனைச் சட்டமாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும். இவ்வாறு அவர் கூறினார்.