தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக பரிசீலனை!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொதுப்பணித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக, எம்.எல்.ஏக்கள் தங்கள் பகுதியில் தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என வைத்த கோரிக்கைக்கு வருவாய்த்துறை அமைச்சர் பதில் அளித்தார்.

முன்னதாக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், “திருவண்ணமாலை மாவட்டத்தில் இருந்து ஆரணியை தனியாக பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். அதேபோல அரசு கொறடா கோவி.செழியன், “டெல்டா மக்களின் மனம் குளிர இந்தக் கூடத்தொடரிலேயே கும்பகோணம் தனி மாவட்டமாக அமைக்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 8 மாவட்டங்களை பிரிப்பது தொடர்பான கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மாவட்டம் என்ற கோரிக்கைக்கு நிதிநிலைக்கு ஏற்ப முதல்வர் முடிவெடுப்பார்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்துவந்த நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் புதிதாக 6 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிக்கும்.