மாவட்ட செயலாளர்களுக்கு இடையேயான போட்டியால் பாதிக்கப்படுவது நான் தான்: உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 3 மாவட்ட செயலாளர்களுக்கு இடையேயான போட்டியால் பாதிக்கப்படுவது நான் தான் என்றும் பேசினார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி முன்பதிவு தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோரும், திமுக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கைகள் அனைவருக்கும் இளைஞரணி சார்பில் ரூ. 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மா.சுப்பிரமணியன் அண்ணன் அமைச்சர், மாவட்ட செயலாளர் என்பதைத் தாண்டி டக்கென நினைவுக்கு வருவது அவர் மாரத்தான் வீரர் என்பதுதான். உலகத்திலேயே ஃபிட்டான அமைச்சர் என்று சொன்னால் நமது முதலமைச்சரை சொல்லலாம், அதற்கு அடுத்து மா.சுப்பிரமணியன் தான். தமிழ்நாடு மட்டுமல்ல ஜப்பானில் எல்லாம் போய் மாரத்தான் ஓடுகிறார் மா.சு. மா.சுப்பிரமணியன் ஓடாத நாடே கிடையாது. எனக்கெல்லாம் அவரை பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது.

கட்சி நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். அமைச்சர் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கிறார்.. மாரத்தானிலும் ஓடுகிறார். அதிலும், சேகர்பாபு, சிற்றரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டியே நடக்கிறது. யார் மாவட்டத்தில் அதிக நிகழ்ச்சிகளை நடத்துவது என்று.. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது நான் தான். சென்னையில் இருந்தால் இவர்கள் கூட்டிச் சென்று விடுவார்கள் என இவர்கள் 3 பேருக்கு பயந்தே நான் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்திற்கு போய்விடுகிறேன். அந்தளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்

ஓடினாள் ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற கருணாநிதியின் பராசக்தி பட வசனம் போல அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சென்றால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த மாவட்டத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வுக்குச் சென்றாலும் அரசு அதிகாரிகள் பாவம். காடு, மலை, மேடு என்று ஓட விடுகிறார். காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து ஓட ஆரம்பித்து விடுகிறார்.

தயாநிதி மாறனை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமலேயே அவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவர் வந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் வேறு வருகிறது என சிரித்தபடியே பேசினார் உதயநிதி ஸ்டாலின். “தம்பி தம்பி.. போதும்.. போதும்” என தயாநிதி கையெடுத்துக் கும்பிட்டார். இதையடுத்து, மத்திய சென்னையில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.