இத்தாலியில் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலத்துக்கு தடை!

இத்தாலியில் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலம் அல்லது வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் பிரதமர் ஜியோர்ஜியா மலோனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ள இத்தாலி அரசின் வரைவு அறிக்கையில், ‘இத்தாலி மக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளுக்கு ஆங்கிலம் அல்லது வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்தினால், ஒரு மில்லியன் யூரோக்கள் (1,08,705 டாலர்) வரை அபராதம் விதிக்கப்படும். எந்தவொரு வெளிநாட்டு மொழியையும் அலுவல் மொழியாக பயன்படுத்தக்கூடாது. ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழியைப் பயன்படுத்துவதால், இத்தாலிய மொழிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இத்தாலிய மொழிக்கு அவமானம் ஏற்படுகிறது. அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்தக் கூடாது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை இத்தாலிய மொழியில் பதிப்புகளை வெளியிட வேண்டும். இவ்விவகாரம் சாதாரணமாக கடந்து செல்லக் கூடியது அல்ல; ஒட்டுமொத்த சமூகத்திலும் ஆங்கில மோகத்தை தடுப்பதற்கான வழிமுறையாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா, இன்னும் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.