விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதைக் குழந்தையுடன் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று நேற்று போலீசாருடன் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கிடையே அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாகியுள்ள திரைப்படம் விடுதலை. காமெடி நடிகர் சூரியை நாயகனாக வைத்து இந்த விடுதலை திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிக பாசிட்டிவான ஒரு ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. விமர்சன ரீதியாகப் பலரும் விடுதலை படத்தைப் பாராட்டி வருகின்றனர். அதேபோல மக்களும் ஆர்வமாக தியேட்டர் வருகிறார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த விடுதலை திரைப்படம் வன்முறை அதீதமாக இருக்கும் படமாகும். நெஞ்சை உலுக்க வைக்கும் பல காட்சிகள் இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் காரணமாகவே தணிக்கை குழு இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஏ சான்றிதழ் என்றால் இந்தப் படத்தை தியேட்டரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதி உண்டு. 18 வயதிற்குக் குறைவானவர்களுக்கு அனுமதி இல்லை.
இதற்கிடையே நேற்றைய தினம் சென்னையில் விடுதலை படம் போடும் போது பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. அதாவது விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல திரையரங்கில் சமூக செயற்பாட்டாளர் வளர்மதி தனது குழந்தையுடன் வந்துள்ளார். இதற்காக அவர்கள் டிக்கெட்டும் எடுத்துள்ளனர். இருப்பினும், விடுதலை ஏ சான்றிதழ் படம் என்பதால், குழந்தையை தியேட்டருக்குள் அனுமதிக்கவில்லை. அப்போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தியேட்டர் ஊழியர்கள் குழந்தையை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அதுவரை பொறுமையாகக் கேட்ட வளர்மதி, அதன் பிறகு வாக்குவாதம் செய்துள்ளார். அவர்களுடன் சண்டை போட்டு குழந்தையை தியேட்டருக்குள் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் தாமதத்தில் படம் திரையிடப்பட்டுள்ளது. அப்போது அங்கே வந்த தியேட்டர் ஊழியர்கள், அவர்களையும் குழந்தையையும் போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், போலீசாரிடம் இது குறித்துச் சொல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி கொஞ்ச நேரத்தில் அங்கே போலீசார் வந்துள்ளனர். ஏ சான்றிதழ் படம் என்பதால் குழந்தைகள் படத்தைப் பார்க்க அனுமதியில்லை என்று சொல்லியுள்ளனர். இருப்பினும், போலீசாருடனும் அவர் வாக்குவாதம் செய்துள்ளார்.
அவர், “அரைகுறை ஆடையுடன் பெண்களை ஆட வைக்கும் படங்களை குடும்பத்துடன் பார்க்கலாம். ஆனால், மக்களின் வலியைப் பேசும் படத்தை குடும்பத்துடன் பார்க்கக் கூடாதா.. இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு என்ன காட்ட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. அதை நீங்கள் முடிவு செய்யக் கூடாது. நீங்கள் சும்மா இருந்திருந்தால்.. நாங்கள் படத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாகச் சென்றிருப்போம். நீங்க யாரு எனது குழந்தைகள் படம் பார்க்கக் கூடாது என்று நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள். யாரும் வெளியே செல்ல மாட்டார்கள். மற்ற எந்தப் படங்களிலும் வன்முறை காட்சிகள் இல்லையா.. எல்லா படத்திலும் தான் வன்முறை இருக்கு. பெண்களை அசிங்கமாகக் காட்டும் எதாவது ஒரு படத்திற்கு வந்துள்ளீர்களா” என்று கூறுகிறார். அதற்கு அங்கே இருந்த பலரும் கூட சப்போர்ட் செய்துள்ளனர். இதனால் அப்போது போலீசார் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.
இதனிடையே ஏ சான்றிதழ் பெற்ற விடுதலை படத்தைக் குழந்தைகளுடன் பார்க்க அனுமதிக்க வேண்டும் என வாக்குவாதம் செய்த வளர்மதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.