அண்ணாமலை சொல்வது எல்லாம் வேத வாக்கு கிடையாது: செல்லூர் ராஜூ

எங்களுக்கு அண்ணாமலை சொல்வது வேத வாக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் எங்களுக்கு வேதவாக்கு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியை கட்சி தொண்டர்களை தாண்டி பொதுமக்களும் வரவேற்கிறார்கள். கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை அவர் கருத்தை சொல்லி இருக்கிறார். வரும் நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என்று அமித்ஷா சொல்லிவிட்டார். எடப்பாடி பழனிசாமியும் இதை சொல்லிவிட்டார். எங்களுக்கு அண்ணாமலை சொல்வது வேதவாக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் எங்களுக்கு வேதவாக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, தற்போது இருக்கும் சூழலில் அதிமுகவிற்கு பாஜக தேவையா? இல்லை பாஜகவிற்கு அதிமுக தேவையா? தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வளர்ந்து வருகிறோம் என்று அண்ணாமலை சொல்லி வருகிறாரே அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, “அண்ணாமலை அவர் கட்சியை வளர்ப்பதற்காக ஒரு தலைவர் சொல்லும் கருத்தை தான் சொல்லியிருக்கிறார். அதில் தவறான கருத்து எதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அண்ணாமலை அவர் கருத்தை சொல்லி இருக்கிறார். அதிமுக வலுவோடும் பொலிவோடும் இருப்பது அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. எனவே இப்போதே கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச வேண்டியது இல்லை. அவர்கள் கட்சிக்குள் பேசியிருக்கிறார்கள். நிர்வாகிகள் கூட்டத்தில் எல். முருகனும், அண்ணாமலையும் பேசியிருக்கிறார்கள். இது குறித்து எல்லாம் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? அவர்கள் கட்சியில் அவர்கள் நிலைப்பாட்டை சொல்லியிருக்கிறார்கள். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசப்பட வேண்டியது. கூட்டணி தொடரும் என்று யார் சொல்ல வேண்டுமோ அவர்கள் சொல்லிவிட்டார்கள். அமித்ஷாவும், ஜேபி நட்டாவும் சொல்லிவிட்டார்கள். அதிமுக பொதுச்செயலாளரும் சொல்லிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.