ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு!

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இந்த சமயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியாகியது. இதற்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்குகளில் தனி நீதிபதி பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்றும் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேல்முறையீட்டு வழக்கில் பிரதான வழக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணை நடைபெறும். அன்றைய நாளில் இறுதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்றும் அவ்வாறு பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறினர்.