நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதைத்தவிர, நெய்வேலிக்கு பக்கத்தில் இன்னொரு சுரங்கத்தை அமைக்க முடிவாகி உள்ளது. அதாவது, வருடத்துக்கு 1.15 கோடி டன் நிலக்கரி எடுக்கும் 3வது மிகப்பெரிய சுரங்கத்தை ரூ.3556 கோடி செலவில் அமைக்க என்எல்சி இந்தியா நிர்வாக குழுவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம்பெயரும் நிலை ஏற்படும், மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்கள் தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது என்றும் விவசாயிகள் அச்சமும், வேதனையும், கவலையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தும் முக்கிய கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளார். விஜயகாந்த் கூறியுள்ளதாவது:-
நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறும். நிலக்கரி எடுக்க விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் அகதிகளாக இடம் பெயரும் நிலை ஏற்படும். விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை முடியாது. எனவே, நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடவும் தேமுதிக தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.