காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதாக கூறி மாவட்ட பாஜக தலைவர் கைது: அண்ணாமலை கண்டனம்!

நாகர்கோயிலில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதாக கூறி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை காவல்துறை கைது செய்து இருக்கும் நிலையில் இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால் அவரது எம்பி பதவி கடந்த சில நாட்களுக்கு முன் பறிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் நாகர்கோயிலில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோயிலில் இருக்கும் பாஜக மாவட்ட அலுவலகம் முன்பாக திரண்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் பாஜக மாவட்ட அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதாக கூறி பாஜகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பாக கட்சிக் கொடிகளை கொண்ட காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவினரும் தாக்கிக்கொண்ட காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த மோதலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். இரு கட்சியினர் மோதலால் நாகர்கோயில் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான நிலை நீடித்து வருகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கன்னியாகுமரி பாஜக மாவட்டத் தலைவர் திரு தர்மராஜ் அவர்களையும், திருநெல்வேலி முன்னாள் மாவட்டத் தலைவர் திரு மகாராஜன் அவர்களையும், மற்றும் பாஜக தொண்டர்களையும் கைது செய்துள்ள தமிழ்நாடு காவல்துறையின் அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜக அலுவலகத்தைத் தாக்கிய ஜனநாயக விரோதிகளைக் கைது செய்வதை விட்டுவிட்டு, அவசர கதியில் பாஜகவினரைக் கைது செய்வது யாரைத் திருப்தி படுத்துவதற்காக? காவல்துறையை ஏவல்துறையாக முழுவதுமாக மாற்றியிருக்கும் திறனற்ற திமுக, நாளொரு கொலை நடந்து மாநிலமெங்கும் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள பாஜக தலைவர்களையும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. யாராக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. இதில் அரசியல் கட்சி பாகுபாடு இன்றி குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேரும், பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பா.ஜனதா கட்சியினரும் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.