கேரளா மாநிலம் அட்டப்பாடியில் அரிசி திருடியதாக பழங்குடி இளைஞர் மது அடித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பழங்குடி இனத்து இளைஞர் மது. கடுகுமன்னா என்ற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லானின் மகன் மது. அட்டப்பாடியில் 2018-ம் ஆண்டு பல சரக்கு கடையில் அரிசி திருடினார் என்பதற்காக மதுவை அப்பகுதியினர் அடித்து சித்ரவதை செய்தனர். அப்போது போலீசார் தலையிட்டு மதுவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பாவி பழங்குடி இளைஞர் மதுவை அடித்து படுகொலை செய்யும் காட்சிகளை கொடூரர்கள் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்த கொடூரமும் அதிரவைத்தது. மதுவை உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், பட்டினியால் மது வாடிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர். ஆம் மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை கூட உணவுப் பொருள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஒட்டுமொத்த நாட்டையே வெட்கி தலைகுனிய வைத்தது இந்த சம்பவம்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யபட்டு மன்னார்காடு எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியது. 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் 3,000 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் மொத்தம் 16 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் அட்டப்பாடி மது கொலை வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்து கொன்டே இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். கேரளா அரசு சிறப்பு வழக்கறிஞராக கோபிநாத் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கான எந்த வசதியும் செய்து தரப்படாத காரணத்தால் தமது பதவியை ராஜினாமா செய்த அவலமும் நிகழ்ந்தது. பின்னர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ரகுநாத், நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. ஒருவழியாக இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அட்டப்பாடி பழங்குடி இளைஞர் மதுவை படுகொலை செய்த 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. குற்றவாளிகளான 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி.