டெல்லியில் பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் பேச்சுவார்த்தை!

டெல்லியில் அவர் பிரதமர் மோடி-பூடான் மன்னர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

டெல்லியில், பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் பேச்சுவார்த்தை நடத்தினார். பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியல் வாங்சுக், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்தார். நேற்று டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் பேசினர். பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவு செயலாளர் வினய் கவாட்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இருதரப்பு உறவு மற்றும் அவரவர் தேசநலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பூடான் மன்னரின் இந்திய பயணம், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான செயல்திட்டத்தை வகுக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. டோக்லாம் பிரச்சினை இடம்பெற்றதா என்று கேட்டால், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

பூடான்-சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு, பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பகுதியில் சீனா தனது சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டது. அதற்கு பூடான் எதிர்ப்பு தெரிவித்தது. பூடானுக்கு ஆதரவாக, இந்தியாவும் களத்தில் குதித்தது. இந்தியா-சீனா படைகள் 73 நாட்களாக எதிரும், புதிருமாக நின்றன. பலசுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது. ஆனால், சமீபத்தில் பூடான் பிரதமர் லோடே ஷேரிங், டோக்லாம் பிரச்சினையில் சீனாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது இந்தியாவுக்கு கவலை ஏற்படுத்தியது. இந்த பின்னணியில், பூடான் மன்னர் இந்தியா வந்துள்ளார்.