தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் கைது!

தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தேர்வும் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. தெலுங்கானா 10-ம் வகுப்பு தெலுங்கு மொழித் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அரசு பள்ளி ஒன்றின் தேர்வறை கண்காணிப்பாளர், வினாத்தாளை செல்போனில் படம் பிடித்து மற்றொரு அரசு பள்ளி ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார். இப்படி தெலுங்கு மொழி வினாத்தாள் லீக் ஆன விவகாரம் ஊடகங்களிலும் அம்பலமானது. இதனையடுத்து தெலுங்கானா மாநில அரசு தேர்வறை கண்காணிப்பாளர் உட்பட 4 அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. ஆனாலும் தெலுங்கானா கல்வி அமைச்சர்ப் பதவி விலகித்தான் ஆக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு இந்தி தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 10-ம் வகுப்பு இந்தி வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் கமலாபூர் தேர்வு மையத்தில் இருந்து பாஜகவின் பிரசாந்த் என்பவர் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை லீக் செய்தது தெரியவந்தது. பாஜக நிர்வாகி பிரசாந்த், மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய்க்கு வாட்ஸ் அப்பில் இந்த வினாத்தாளை அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக பிரசாந்துடன் பண்டி சஞ்சய் பேசியதாகவும் போலீசார் விசாரணயில் தெரியவந்தது. இதனையடுத்து தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய், 10-ம் வகுப்பு வினாத்தாள் லீக் விவகாரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மாநில பாஜக தலைவர் ஒருவர் வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் புயலை கிளப்பி உள்ளது.

ஏனெனில் பிரதமர் மோடி வரும் 8-ந் தேதி தெலுங்கானா மாநிலம் வருகை தர உள்ளார். செகந்திராபாத்- திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் ரூ10,000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர், வினாத்தாள் லீக் அவுட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் பண்டி சஞ்சய் போலீசாரால் கைது செய்யப்படும் வீடியோவை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனை பண்டி சஞ்சய் தமது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். பண்டி சஞ்சய் தமது டுவிட்டர் பக்கத்தில், தெலுங்கானாவில் ஆளும் பிஆர்.எஸ். அரசாங்கத்தை கேள்வி கேட்டதாலேயே தம் மீது நடவடிக்கை பாய்கிறது என குற்றம் சாட்டி உள்ளார்.