காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: வைகோ

காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி படுகை மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மோடி அரசு ஏலம் விடுவதும், மாநில அரசுடன் கலந்தாய்வு செய்யாமல் ஏகாதிபத்திய பேரரசு மனப்பான்மையுடன் தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க முயற்சிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள். 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றிய அரசு அலுவலங்கள் முற்றுகைப் போராட்டமும், மனிதச் சங்கிலிப் போராட்டமும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன. மீண்டும் காவிரி படுகை மக்கள் போராட்டக் களத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஏல அறிவிப்பையும் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.