காரைக்கால் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்கக் கோரியும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
5-4-2023 அன்று தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 1-4-2023 அன்று 12 மீனவர்களுடன் (தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள், புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள்) IND-PY-PK-MM-969 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும், 5-4-2023 அன்று அதிகாலை 1-00 மணியளவில் கிழக்குக் கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 4 மீனவர்களின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான மீனவர்களுக்குச் சொந்தமான 7 செல்போன்கள் மற்றும் மீன்களை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சார்ந்த மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று அடிக்கடி தாக்குதல் நடத்துவது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திடும் இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய போக்கினை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று கட்டுப்படுத்திடவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன். இலங்கை அரசின் வசமுள்ள 12 மீனவர்களையும், 109 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தூதரக நடவடிக்கைகளை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மீனவர்கள் தொடர்பான வழக்கு நேற்று இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீனவர்களின் விசைப்படகுகள் அந்நாட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.