தைவானை கைப்பற்றும் வெறியுடன் சுற்றி வந்த சீனா, தற்போது அந்நாட்டை நாலாப்புறமும் சுற்றி வளைத்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தைவானை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் சீன ராணுவத்தின் போர்க்கப்பல்கள் பெரும் இரைச்சலுடன் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த முறை தைவானை கைப்பற்றாமல் சீன ராணுவம் திரும்ப வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாவதால் அமெரிக்கா கடும் அதிர்ச்சியில் உள்ளது.
21-ம் நூற்றாண்டிலும் கூட நாடு பிடிக்கும் ஆசையுடன் ஒரு நாடு இருக்கிறது என்றால் அது சீனாவாக மட்டுமே இருக்க முடியும். தன்னை சுற்றியுள்ள இந்தியா, நேபாளம் , பூடான், தைவான் உள்ளிட்ட நாடுகளின் ஒருபகுதியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என ஓநாய் பசியுடன் சீனா சுற்றி சுற்றி வருகிறது. அப்படிதான், தனி நாடாக விளங்கும் தைவானை நீண்டகாலமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. எப்படியாவது தைவானை சீனாவுடன் இணைத்துவிட வேண்டும் என்பதில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உறுதியாக இருக்கிறார்.
ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தைவானுக்கு பக்கபலமாக இருப்பதால் அந்நாட்டை நெருங்க சீனா சற்று யோசித்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாக போர் தொடுத்தது சீனாவுக்கு தைரியத்தை கொடுத்தது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், ரஷ்யா போர் தொடுத்த போது அந்நாடுகள் வேடிக்கை மட்டுமே பார்த்தன. இந்த துணிச்சலில் இருக்கும் சீனா, அண்மையில் ஒரு பயங்கர எச்சரிக்கையை பிரகடனம் செய்தது. அதாவது, தைவானே தாமாக வந்து சீனாவில் இணைந்து கொள்ள வேண்டும்.. இல்லையெனில், ராணுவம் மூலம் அது நடக்கும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் பகிரங்கமாக எச்சரித்தார்.
இந்நிலையில்தான், தைவானின் ஒரு செயல் சீனாவை கடுங்கோபம் அடையச் செய்தது. இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற தைவான் அதிபர் ட்சாய் இங் வென், அமெரிக்க மக்களவை சபாநாயகரான கெவின் மெக்ரார்த்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு நிகழ்வதற்கு முன்பே, அமெரிக்காவுக்கு செல்ல வேண்டாம் என தைவானை சீனா எச்சரித்து இருந்தது. ஆனால், தைவான் அதிபர் இதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா சென்று கெவின் மெக்கார்த்தியை சந்தித்து பேசினார். தைவான் அதிபரின் இந்த செயல், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கண்களை சிவக்கச் செய்தது.
இந்த சூழலில், நேற்று நள்ளிரவே சீன ராணுவத்தின் போர்க்கப்பல்கள் தைவானை சுற்றி வளைத்தன. சுமார் 10-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் பேரிரைச்சலுடன் தைவானை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அத்துடன், அங்கு போர்ப்பயிற்சியிலும் சீனப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று இரவு சீன போர் விமானங்களும் தைவான் வான் எல்லையை சுற்றி வளைத்துவிடும் என சீன ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் எந்நேரமும் தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தலாம் என்கிற சூழல் நிலவி வருகிறது. சீனாவின் இந்த அதிரடியை எதிர்பார்க்காத அமெரிக்கா, அடுத்து என்ன செய்வது என ஆலோசனை நடத்தி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், தைவானை சீனா நெருங்கியுள்ளதால் அந்நாடு கைப்பற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தைவான் ஜலசந்தியின் இடைநிலைக் கோட்டைக் சீனாவின் 42 போர் விமானங்கள் கடந்திருக்கிறது. இந்த கோடுதான் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை கோடாக கருதப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் 42 பேர் விமானங்கள் 8 போர் கப்பல்கள் இந்த எல்லையை தாண்டி வந்திருப்பதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, “தைவானுடனான கூட்டணி தொடரும். அந்நாட்டிற்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்யும்” என்று கூறியுள்ளார்.
இந்த பதற்றம் தொடர்பாக விளக்கமளித்துள்ள தைவான் அதிபர், “நாங்கள் அமெரிக்காவுடன் ராஜதந்திர உறவுகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் எங்கள் தீவை பாதுகாக்க நாங்கள் அமெரிக்காவை நம்பியிருக்கிறோம். தைவான் மக்கள் ஜனநாயகத்தை நேசிக்கின்றனர், அமைதியை விரும்புகின்றனர்” என்று கூறுியுள்ளார். ஆனாலும் இவருடைய வார்த்தைகளை சீனா பொருட்படுத்தவில்லை. எனவே தனது போர் பயிற்சியை சீனா தீவிரப்படுத்தியிருக்கிறது. தைவானுக்கு அருகில் இருக்கும் தீவுகளில் தொடர் ஏவுகணை தாக்குதல்களை சீனாவின் போர் விமானங்கள் வீசியுள்ளன. எனவே அப்பகுதி முழுவதும் கரும்புகை மேலெழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.