கடலுக்கு அடியில் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனை!

வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது. வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. இருநாட்டு படைகளும் தீபகற்பம் பகுதியில் கூட்டு போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா உலக நாடுகள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்துகிறது. இந்த நிலையில் தற்போது வடகொரியா கடலுக்கு அடியில் அணுஆயுத சோதனை நடத்த தொடங்கி உள்ளது. இதன் மூலம் செயற்கையாக கடலில் சுனாமியை ஏற்படுத்தி எதிரிகளின் கடற்படை கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை அழிக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக கடலுக்கு அடியில் டிரோன் மூலம் அணு ஆயுத சோதனையை இன்று மீண்டும் வடகொரியா நடத்தி உள்ளதாக தென் கொரியா குற்றம் சாட்டி உள்ளது. ஹயில்-2 என்ற பெயரிலான இந்த அணு ஆயுத சோதனை கடலுக்கு அடியில் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் பயணித்து குறிப்பிட்ட இலக்கை தாக்கியதாக தெரிகிறது. கிழக்கு துறைமுக நகரான டன்கான் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த வாரத்தில் நடந்த 2-வது சோதனை இதுவாகும். இப்படி தொடர்ந்து வடகொரியா அடுத்தடுத்து சோதனை நடத்தி வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஹெய்ல் -2 ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டது குறித்து வடகொரியாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 4 முதல் 7 – வரை ஏவுகணை சோதனைகளை நடத்தியதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வெளியிட்ட அறிவிப்பில், “ நீருக்கடியில் எங்களுடைய ஏவுகணையின் செயல்திறனும், நம்பகத்தன்மையும் ஆய்வுக்குபின் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வடகொரியா தொழிலாளர்களை பணியமர்த்த வௌிநாடுகள் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஜப்பானை குறி வைத்தும் வடகொரியா ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரிய நாடுகள் கூட்டாக ஒரு அறிக்கையை வௌியிட்டுள்ளன. அதில், “ஏராளமான வடகொரிய தொழிலாளர்கள் ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு வௌிநாடுகளில் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தை வடகொரிய அரசு அணுஆயுத சோதனைகளுக்காக பயன்படுத்தி வருகிறது. மேலும் கிரிப்டோ கரன்சி திருட்டு உள்ளிட்ட குற்ற நடவடிக்கைள் மூலமாகவும் வடகொரியாவின் அணுஆயுத, ஏவுகணை சோதனைகளுக்கு நிதியுதவி கிடைக்கிறது. எனவே, வடகொரியாவின் அணுஆயுத திட்டத்துக்கு உதவும் வௌிநாட்டு தொழிலாளர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என ஐநா நிறைவேற்றிய தீர்மானத்தை அனைத்து நாடுகளும் நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.