நாக்கை நீட்டி சிறுவனை முத்தமிடச் சொன்ன விவகாரம்: தலாய்லாமா மன்னிப்பு!

தலாய்லாமாவின் செயலை கண்டித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

திபெத்திய புத்தமத தலைவரான தலாய்லாமா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு அடுத்த தலாய்லாமா ஒரு பெண்ணாக இருந்தால் அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என தலாய்லாமா கூறியது சர்ச்சையானது. இதனால் அவர் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் தற்போது தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவன் ஒருவனின் உதட்டோடு உதடு வைத்து தலாய்லாமா முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. மேலும் அந்த வீடியோவில் தலாய்லாமா தனது நாக்கை நீட்டியபடியே, என் நாக்கை சுவைக்கிறாயா? என சிறுவனிடம் கேட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும் தலாய்லாமாவை கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. அதில் சிலர், இந்த தவறான நடத்தையை நியாயப்படுத்த முடியாது என கூறியுள்ளனர். இன்னும் சிலர் இது அருவருப்பானது, தலாய்லாமாவை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலாய்லாமா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. ‘சமீபத்தில் நடந்த நிகழ்வில், ஒரு சிறுவன் தலாய் லாமாவிடம் தன்னை கட்டிப்பிடிக்க முடியுமா? என்று கேட்டது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. அதில், தனது வார்த்தைகள் காயப்படுத்தியிருந்தால், அதற்காக சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் தலாய்லாமா மன்னிப்பு கேட்க விரும்புகின்றார்’ என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.