எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
அதிமுகவில் சட்டப் போராட்டங்கள் தொடர் கதையாகி உள்ள நிலையில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் எடப்பாடியின் கைகள் ஓங்கியுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தை நோக்கி அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கிடையில் சட்டமன்றத்தில் இருக்கை விவகாரம் தொடர்ந்து சச்சரவில் நீடித்து வருகிறது.
தற்போது எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஆனால் தற்போது அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே அவரது இருக்கையை மாற்ற வேண்டும். தான் நியமித்துள்ள ஆர்.பி.உதயகுமாருக்கு அந்த இருக்கையை வழங்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து வருகிறார். இதுதொடர்பாக ஏற்கனவே சில விளக்கங்களை அப்பாவு கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் இன்றைய தினம் கேள்வி நேரம் தொடங்கியதுமே எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி எழுப்பினார். இதுதொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கும் காட்சிகள் மட்டும் நேரலையில் வருவதில்லை. ஆனால் அமைச்சர் பதிலளிக்கும் காட்சிகள் மட்டும் எப்படி வருகின்றன?
அமைச்சர் துரைமுருகன்: இதையே தான் எதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கும் போதும் தெரிவித்தோம்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: விதியை தளர்த்தி நேரத்திற்கு ஏற்ப நடந்து கொள்வதை ஏற்க முடியாது.
அமைச்சர் துரைமுருகன்: விதிகளை தளர்த்தி நடவடிக்கைகளை தொடங்கியதே அதிமுக தான்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்றக்கோரி ஏற்கனவே பலமுறை முறையிடப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-ஐ மாற்றி ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும்.
சபாநாயகர் அப்பாவு: இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீண்ட விளக்கம் அவையில் கொடுத்துள்ளேன். அரசின் தீர்மானம் உள்ளதால் கவன ஈர்ப்பு தீர்மானம் நாளை எடுத்து கொள்ளப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கிற இருக்கையை மரபு அடிப்படையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உதயகுமாருக்கு வழங்க வேண்டும்.
ஆனால் சபாநாயகர் அப்பாவு ஏற்கவில்லை. இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானம் எண்ணிக் கணக்கிடும் வகையில் 144 உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேரவை கதவுகள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்மூலம் ஆளுநர் தொடர்பான விஷயங்களை அவையில் விவாதிக்கலாம். தீர்மானங்கள் கொண்டு வரலாம். இந்த தீர்மானம் நிறைவேறும் ஆளும் கூட்டணி கட்சியினர், பாஜக எம்.எல்.ஏக்கள் மட்டும் இருந்தனர். அதிமுகவினர் ஏற்கனவே வெளிநடப்பு செய்துவிட்டனர்.