திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆகப் பிரிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது பாமகவின் நீண்டகால கோரிக்கை. திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்கள்தொகை 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 24 லட்சத்து 64 ஆயிரத்து 875 ஆகும். இன்றைய நிலையில் மக்கள்தொகை 27 லட்சத்தைக் கடந்திருக்கக் கூடும். தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை வளங்களும், வேளாண்மையும் சிறப்பாக இருக்கும் போதிலும், வளர்ச்சி என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்குக் காரணம் மாவட்டம் மிகவும் பரந்து விரிந்து காணப்படுவது தான். நிலப்பரப்பின் அடிப்படையில் பார்த்தால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு (6286 ச.கிமீ) அடுத்தபடியாக 6188 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. இது சென்னையை விட 15 மடங்கு அதிகமாகும். ஆனாலும், கடந்த 34 ஆண்டுகளாக இது ஒரே மாவட்டமாக தொடர்கிறது. மாவட்டத்தில் ஓர் எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு 158 கி.மீ பயணிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்கள் உள்ளன. 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இரு மக்களவைத் தொகுதிகள் இந்த மாவட்டத்தில் வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் தனி நாடாக அறிவிக்கப்பட்டால் உலகின் 143-ஆவது பெரிய நாடாக இருக்கும். பஹ்ரைன், மொரிஷியஸ், பூடான் போன்ற 92 நாடுகளை விட அதிக மக்கள்தொகை கொண்டதாக இருக்கும். இவ்வளவு பெரிய மாவட்டத்தை ஒரு மாவட்ட ஆட்சியர் நிர்வகிப்பதும், வளர்ச்சித் திட்டப் பணிகளை திறம்பட செயல்படுத்துவதும் சாத்தியமல்ல. 27 லட்சம் மக்களின் தேவைகளை நிச்சயமாக ஓர் அதிகாரியால் நிறைவேற்ற முடியாது.
பெரிய மாவட்டமாக இருப்பதால் திருவண்ணாமலை எதிர்கொள்ளும் இன்னொரு சிக்கல், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான தனிநபர் ஒதுக்கீடு மிகவும் குறைவாக இருப்பதாகும். இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது மட்டும் தான். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.