ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்து போட்டதால் மட்டும் தமிழ்நாட்டில் இவர் ஆளுநராக தொடர வேண்டும் என்று அவசியம் எதுவும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
ஆளுநர் நடந்து கொண்ட விதம் முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல. அவசர சட்டம் வந்த போது எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை. ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. கையெழுத்து போட்டு விடுகிறார். அதே அவசர சட்டத்தை மீண்டும் நிரந்தர சட்டமாக்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பப்படுகிறது. 2 மாதங்களுக்கு பிறகு விளக்கம் கேட்கிறார். விளக்கம் கேட்க உரிமை உண்டு. அதை யாரும் மறுக்கவில்லை. விளக்கம் கேட்ட 24 மணி நேரத்தில் அரசு விளக்கம் அளித்து விடுகிறது. அதன் பிறகு 2 மாதம் காலம் தாமதப்படுத்தி விட்டு, இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ளது என திருப்பி அனுப்பி விடுகிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதில் ஆளுநர் கையெழுத்திடுவதை தவிர வேறு வழியில்லை. விளக்கம் கேட்க முடியாது என்று சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு பிறகும் ஆளுநர் என்ன சொல்கிறார்… மசோதா கிடப்பில் போடப்பட்டால் அது செல்லாது… ஏற்கத்தக்கது அல்ல. .என்பதுதான் பொருள் என்று அவர் சொன்னது எல்லாருக்கும் தெரியும்.
எனவே இந்த பிரச்சினையில் ஆளுநர் தனது கடமையை செய்தார் என்று யாரும் வக்காலத்து வாங்கி பேசினால் அது எதார்த்தம் அல்ல. செயற்கையாக சொல்லப்படுகிற ஆளுநரை காப்பாற்ற சொல்வதாகத்தான் அது அமையும். ஆளுநர் மீது யாருக்கும் தனிப்பட்ட வெறுப்பு விருப்பு கிடையாது. ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர் அப்படி இருந்தாரா என்பதுதான் பிரச்சினை. ஆளுநர் ஆளுநராக இல்லை. ஒரு ஆர்.எஸ்.எஸ் காரராக செயல்பட்டார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. ஏறத்தாழ 20 மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்து இருக்கிறார். ஆளுநரின் இந்த கருத்துதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளுநர் அவர் வகிக்கிற பொறுப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. அவர் வகிக்கிற பொறுப்பு மிக உயரிய பொறுப்பு. வென்றது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஜனநாயகப் போராட்டம்! கையெழுத்து போட்டதால் மட்டும் தமிழ்நாட்டில் இவர் ஆளுநராக தொடர வேண்டும் என்று அவசியம் எதுவும் இல்லை. இவர் ஒரு சர்ச்சைக்குரிய நபராகவிட்டார். ஆர்.என்.ரவி என்பதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். இவ்வளவு சர்ச்சைக்கு பிறகும் தமிழ்நாட்டில் அவர் நீடிப்பது அவருக்கே நல்லது அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.