மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியை எதிர்த்ததாக சொந்த நாட்டு பொதுமக்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகளை வான்வழியே வீசி கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இச்சம்பவத்துக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் நாட்டில் ராணுவ கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பொதுமக்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. இந்த அடக்குமுறைக்கு எதிராக மியான்மரின் பல பகுதிகளில் பல்வேறு ஆயுதம் தாங்கிய குழுக்கள், ராணுவத்துடன் யுத்தம் நடத்தி வருகின்றன. மியான்மரின் வடமேற்கு சாகெய்ங் பிராந்தியத்தில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் ஆயுத குழுக்கள் உக்கிர யுத்தம் நடத்தி வருகின்றன. இப்பிராந்தியத்தில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை மியான்மர் ராணுவம் நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இடைவிடாத தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிறது இந்த பிராந்தியம்.
இதன் உச்சமாக சாகெய்ங் பகுதியில் சில கிராமங்களை மட்டும் இலக்கு வைத்து விமான மூலம் சரமாரியாக, கொத்து குண்டுகளை வீசியது. இந்த கொத்து குண்டுகளுக்கு இரையான பொதுமக்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. மியான்மர் ராணுவத்தின் இக்கொடூர தாக்குதலில் சுமார் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். கிராமங்களில் தெருவெங்கும் பொதுமக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. பா ஸி கிய் என்ற ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் 60 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.