அமித்ஷா குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சை, அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் விளையாட்டு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி நடந்தது. அப்போது பேசிய தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், “சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. எனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழகம் சார்பில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணியாக சிஎஸ்கே அணி விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் வர்த்தக லாபத்தை ஈட்டுகிறது. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.
அப்போது அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க எம்எல்ஏக்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300- 400 பாஸ் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் கிடைக்கவில்லை என சொன்னார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, பாஸ் வேணும்னு கேக்குறீங்க, என்ன சட்டசபைக்கான பாஸா என கேட்டார். அதற்கு எஸ்.பி.வேலுமணியோ இல்லை ஐபிஎல் போட்டிக்கான பாஸ் கேட்கிறேன். அதுவும் விளையாட்டுதானே. அதனால்தான் மானியக் கோரிக்கையில் தெரியப்படுத்துகிறேன். எனவே விளையாட்டுத் துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என பேசினார்.
இதற்கு விளக்கம் அளிக்க விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சபாநாயகர் அப்பாவு அழைத்தார். அப்போது உதயநிதி கூறுகையில், சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளே நடக்கவில்லை. அப்படியிருக்கும் போது நீங்கள் யாருக்கு பாஸ் கொடுத்தீர்கள் என தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ. அதற்கு உங்கள் நெருங்கிய நண்பரான அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் தலைமை பொறுப்பில் உள்ளார். நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர வாயப்பில்லை. நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் 5 பாஸ் வாங்கித் தந்தால் கூட போதுமானது. நாங்கள் கேட்டால் அது வேறுமாதிரி ஆகிவிடும். என் தொகுதியில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு என் சொந்த காசை கொடுத்து ஐபிஎல் போட்டியை நான் காண வைக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தை இன்றைய தினம் நடந்த சட்டசபை நிகழ்வில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது கிளப்பினார். அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை , மாண்புமிகு என சொல்லாமல் வெறும் அமித்ஷா என கூறியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அமித்ஷா குறித்து அவையில் உதயநிதி பேசியதில் தவறில்லை. அவரது பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா? திரு என குறிப்பிட்டுத்தானே அவர் பேசினார். தவறு இருந்தால் நானே நீக்க சொல்லிருப்பேனே என முதல்வர் விளக்கம் அளித்தார். இதை ஏற்க மறுத்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.