கேரள தங்க கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் மீதான மனு தள்ளுபடி!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, சுங்க மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை, அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 2020 ஜூலையில், 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, என்.ஐ.ஏ., அமலாக்கத் துறை, சுங்கத் துறை ஆகிய அமைப்புகள் தனித்தனியாக விசாரித்து வருகின்றன.

இந்த தங்கக் கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, சுங்க மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, விசாரணைக்கு வந்த போது, மனு ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.