ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி!

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கைபடி விசாரிக்க உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உயிரிழந்த ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் அதை ஆமோதிக்கும் வகையில், “சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்” எனப்பேசினார். கடந்த 2017 மார்ச் 17 ஆம் தேதி ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணைகோரி தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம். துணை முதலமைச்சரான பின்னர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க சம்மதித்த அவர், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

3 மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவுடன் உருவாக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், பல முறை கால நீட்டிப்பு பெற்றுக்கொண்டே இருந்தது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை சம்மன் அனுப்பியும் பல்வேறு காரணங்களை கூறி விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் விசாரணைக்கு ஆஜராகி பல்வேறு விளக்கங்களை அளித்தார். 5 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ஆறுமுகசாமி ஆணையம் முழு விசாரணையையும் நிறைவு செய்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்பித்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியபோது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் அந்த அறிக்கையின்படி எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைபடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக தமிழ்நாடு அரசே முடிவெடுக்க முடியும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.